மதுரை: தீபாவளி பண்டிகைக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை என்றும் விலை உயர்வை தீபாவளி பரிசாக தவெக அரசு கொடுத்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ கூறியதாவது: நாளை மதுரைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். 30 ஆம் தேதி தெப்பக்குளம் பகுதியில் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பசும்பொன் செல்ல உள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை. நான்கு மாத ஆட்சியில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை விஜய் கொடுத்துள்ளார். விலை உயர்வை தீபாவளி பரிசாக தவெக அரசு கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஐந்து தொகுதி இடைத்தேர்தல்! அன்பில் மகேஷ் கைதால் திமுகவுக்கு பின்னடைவு! தவெக கையில் அஸ்திரம்!
கையாலாகாத முதல்வர், ஜென்சி முதல்வர் எனச் சொல்லிக்கொண்டு எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளார் விஜய். எதைப் பற்றியும் வாய் திறக்காமல் கவலைப்படாமல் இருக்கிறார். கைதட்ட, சிரிக்க சுண்டினால் பாவனை செய்ய, பேசக்கூட பொம்மைகள் வந்துவிட்டன. முதல்வர் எதற்கும் வாய்திறக்க மாட்டார்.
மின்சார டெண்டரை இப்போது ரத்து செய்துள்ளார். ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார்கள். மீண்டும் வாபஸ் வாங்குகிறார்கள். டெண்டர் வெளியிட்டு திரும்பப் பெறுகிறார்கள்.
இதெல்லாம் ஊழலுக்கு வழிவகுக்கும். தவெக அரசு வந்த பிறகு மின்கொள்முதலை அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். 20 ரூபாய் கொடுத்து வாங்கிய திமுகவைக் கடுமையாகப் பேசினார்கள். ஆனால் 41 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குகிறார்கள். அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் பிறகு ரத்து செய்துள்ளார்கள்.

வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால் வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்கிறது. சர்கார் படத்தில் வருவது போல விஜய் செய்வார் என ஒரு மாயையில் மக்கள் வாக்களித்தனர். ஆனால் இன்று ரத்தக்கண்ணீர் வடிக்கிறார்கள்.
குளிக்கும் ஷாம்பு, சோப்பால் நுரை வருகிறது; நொய்யல் ஆற்றில் நுரை வருகிறது எனச் சொல்லும் அமைச்சருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும். நான் ஈஜிப்து வெங்காயம் எனப் பேசியதற்கு சின்ன பசங்கள் எல்லாம் தெர்மாக்கோல் எனக் கிண்டல் செய்தார்கள்.
எம்ஜிஆர் போல எவனும் இனி பிறக்க முடியாது. எத்தனை நடிகர்கள் வந்தாலும் எவனும் எம்ஜிஆர் ஆக முடியாது. இப்போது இருக்கிற முதல்வர் விஜய் உட்பட யாரும் எம்ஜிஆர் போல ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள் செய்தது கிடையாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கட்டும். தனுஷ் வரட்டும், சிவகார்த்திகேயன் வரட்டும். ஆனால் யாரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்றார் செல்லூர் ராஜூ.
இதையும் படிங்க: தலைவர் பதவி கிடைக்காததால் பாமக எம்எல்ஏக்கள் பின்வாங்கல்!! அதிருப்திக்கு காரணம் என்ன?