சென்னை திருவொற்றியூர் தாங்கல் பயில்வான் தெருவைச் சேர்ந்த நவுபல் என்ற 17 வயது மாணவன். இவர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்றிரவு 8 மணி அளவில் டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது மழை பெய்ந்து தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த நவுபல் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதனையடுத்து மின்சாரம் தாக்கிய மயக்கமடைந்த சிறுவனை மீட்பதற்காக மின்சாரத்தை துண்டிக்கும் படி சம்பந்தப்பட்ட மின் பகிர்மான அலுவலகத்திற்குள் அங்குள்ள பொதுமக்கள் போன் செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் யாரும் நீண்ட நேரமாக போனை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து பொதுமக்களே உயிரை பணயம் வைத்து, மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நேற்றிரவே திருவொற்றியூர் நெடுஞ்சாலை மற்றும் எண்ணூர் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதானம் ஆன மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கடைசியா அஜித் சொன்ன அந்த வார்த்தை... போலீஸ் தாக்கியதை வீடியோ எடுத்தவர் சொன்ன பகீர் தகவல்...!
இந்நிலையில் இன்று காலை சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை உதவி செயற் பொறியாளரைக் கைது செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவொற்றியூர் சாலையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பாஸ்கரன், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்திரவாதம் கொடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர்.. களைகட்டும் யாக சாலை பூஜை..!