இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பிரதமர் நரேந்திர மோடியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த மாத இறுதியில் தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை திரு.வி.க நகரில் முதலமைச்சர் படைப்பகங்களின் கட்டுமானப் பணிகளை இன்று காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி அரசு திட்டத்தை சீர்குலைக்கிறது என்று குற்றம்சாட்டியதை கடுமையாக விமர்சித்தார். "நாட்டில் என்ன நடக்கிறது என்பதே எடப்பாடிக்கு தெரியவில்லை" என்று கூறிய சேகர்பாபு, பாஜகவுடன் கூட்டணி உறுதியான பிறகும், சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வேறு வேறு நிலைப்பாடு எடுப்பதாக சாடினார்.
இதையும் படிங்க: H. ராஜா அதிரடி கைது..! இதுதான் காரணம்... அமைச்சர் சேகர்பாபு பரபரப்பு பேட்டி..!

100 நாள் திட்டத்தை 125 என்று மாற்றி மக்களை ஏமாற்றுவதாகவும், ஒன்றிய அரசு திட்டத்தை சீர்குலைத்ததை கண்டிக்க வேண்டியது எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் பின்னால் நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர், பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வருவதாக தகவல் வந்துள்ளது குறித்து பேசிய அவர், "பிரதமருக்கு தமிழக கடவுள்களை வழிபடும் எண்ணம் தோன்றியது மகிழ்ச்சி" என்றார். முருகர்கள் மிக சக்தி வாய்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு, பல முயற்சிகள் செய்தும் முருகப் பக்தர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் தான் கைகோர்த்து நிற்கிறார்கள் என்று நையாண்டியாக கூறினார்.
பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர், அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்றார். குறிப்பாக பழனி சென்று நிர்வாகத்தை பார்க்க வேண்டும், சமீபத்தில் குடமுழுக்கு முடிந்த திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் சென்று நிர்வாகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அறுபடை வீடுகளின் நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதை பிரதமர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கை தமிழக அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பிரதமரின் தமிழக பயணம் முக்கியத்துவம் பெறும் நிலையில், அமைச்சரின் இந்த அறிக்கை புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமருக்கு எதிரான சதித்திட்டம்!! பார்லி.,-யில் பழி தீர்க்க முயற்சி!!! மோடிக்கு வைக்கப்பட்ட குறி!! காங்கிரசை சாடும் நயினார்!