சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (அக்டோபர் 8) முக்கியமான அரசியல் நிகழ்வு நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயனின் மகனும், திருப்பூர் நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவருமான பாரதி சுப்பராயன், அந்த அமைப்பின் செயலாளர் சுரேஷ் மற்றும் பிற உறுப்பினர்களுடன் திமுகவில் இணைந்து கொண்டார்.
கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்டாலின் பாரதி சுப்பராயனுக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்பி, துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா, திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்ததை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாரதி சுப்பராயன், தற்போதைய அரசியல் சூழலைக் கடுமையாக விமர்சித்தார். “இன்றைய சூழலில் அரசியல் தரம் மிகுந்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. அரசியல் அனுபவமே இல்லாத ஒரு நடிகர் முதலமைச்சராக இருக்கிறார். போஸ்டர் ஒட்டியவர்களும், கட்-அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்தவர்களும் இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பதவியில் அமர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: சரித்திரத்தில் திமுக-வை மறைக்க முடியாது! பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ திறப்பு குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

அவர்களால் சரியான நிர்வாகத்தை வழங்க முடிவதில்லை. அரசியல் அனுபவமும் அறிவும் இல்லாததால் அரசியல் களம் தரம் தாழ்ந்து போயுள்ளது. வெறும் பஞ்ச் டயலாக்குகள் பேசுவதோ அல்லது தவறான செயல்களைச் செய்வதோதான் நடந்து கொண்டிருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார். சரிந்து வரும் அரசியல் தரத்தை உயர்த்த வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்று வலியுறுத்திய அவர், அதனால்தான் நவீன மனிதர்கள் அமைப்பிலிருந்து விலகி திமுகவில் இணைகிறோம் என்றார்.
ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மொழி ஆதிக்கம் மற்றும் மாநில உரிமைகள் மறுக்கப்படும் தற்போதைய சூழலில், சரியான கொள்கைகளை வகுத்துச் செயல்படும் திமுகவின் கொள்கைகளுடன் தாங்கள் ஒத்துப்போவதால், அந்தக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இணைகிறோம் என்றும் விளக்கினார்.
பாரதி சுப்பராயன் முன்னணி தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்றுப் பேசியுள்ளார். தனது தந்தையின் அரசியல் பாதையைப் பின்பற்றாமல், சுயாதீனமாக ‘நவீன மனிதர்கள்’ என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டு வந்த இவர், இப்போது திமுகவின் கொள்கைப் பாதையில் இணைந்துள்ளார். இந்த இணைவு திருப்பூர் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: செவிலியர் போராட்டத்தில் திமுகவினருக்கு என்ன வேலை? அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!