தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் அவர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நிதி மேலாண்மையைக் கடுமையாகச் சாடித் தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை குறித்து அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் நிதி நெருக்கடி காரணமாக முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஊதியம் 30% முதல் 50% வரை குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், இந்தியாவையே கடன்கார நாடாக்கிய காங்கிரசுக்கு ஒரு சிறிய மாநிலத்தைத் திவாலாக்குவது ஒன்றும் கடினமான காரியமல்ல என்று விமர்சித்துள்ளார். மேலும், அச்சாணி முறிந்த தேரும், இந்தியா கூட்டணியினர் ஆளும் மாநிலங்களும் ஒருபோதும் சரியான இலக்கை நோக்கி நகரவே நகராது என்பதற்குத் தமிழகத்தின் திமுக அரசே மிகச்சிறந்த சான்று என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாத்தூர் தொகுதியில் போட்டியா? சஸ்பென்ஸை உடைத்த நயினார் நாகேந்திரன்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தின் சொந்த வருவாய் சுமார் ரூ. 26 ஆயிரம் கோடி குறைந்துள்ளதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் சுமை ரூ. 10.62 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று அவர் அதிரடிப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். நிதி மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறன் இல்லாத இந்தத் திமுக - காங்கிரஸ் கூட்டணியை இனியும் ஆட்சியில் தொடரவிட்டால், தமிழக அரசு ஊழியர்களின் ஊதியமும் பிடுங்கப்படும் என்றும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமே முடக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதிர்ஷ்டவசமாக ஐந்தாண்டுகள் மட்டுமே ஆட்சிக்காலம் என்பதால் மக்கள் தப்பிப்பார்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவின் பி-டீமாக மாறிவிட்டது அதிமுக! திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!