தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய விமான நிலையம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விவசாயமும் முக்கியம் என்றும், பரந்தூர் விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பது தாயையும் சேயையும் பிரிப்பதற்குச் சமமானது என்பதால், அங்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே முறைப்படி திருப்பி ஒப்படைப்பது தொடர்பாகச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனாரின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு அரசு விழாக்களில் இனி பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, முதல்முறையாக இந்நிகழ்வில் கரகாட்டம், மயிலாட்டம் மற்றும் கிராமிய இசைக் கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் வெகுவிமரிசையாக நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், உலகத் தமிழ் மாநாட்டை மிக பிரம்மாண்டமாக நடத்துவது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளார்; மாநாட்டிற்கான பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ளத் தனி வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்துப் பேசிய அவர், விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பிடுங்குவது என்பது தாயையும் குழந்தையையும் வலுக்கட்டாயமாகப் பிரிப்பதற்கு ஒப்பானது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு, மீண்டும் அந்த நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பதில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து வல்லுநர்களுடன் விரிவாகக் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு விவசாயமும் தேவை, உலகத்தரம் வாய்ந்த விமான நிலையமும் தேவை; எனவே அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தே அரசு அடுத்தகட்ட முடிவை எடுக்கும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கலைக் கல்லூரி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..! ஊதிய உயர்வு... மேம்பாட்டு பணிகள்..! புதிய அறிவிப்புகள்..!!