அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு உலக வர்த்தக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மீண்டும் வர்த்தக மோதல் உருவாகும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அமேசான், கூகுள், மெட்டா, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு புதிய வரி விதிக்கும் திட்டத்தை பல ஐரோப்பிய நாடுகள் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: என்னை எல்லாரும் கைவிட்டுட்டாங்க! நான் ஏமாந்துட்டேன்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி!
இதற்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து வரி விதிக்கும் எந்த நாட்டுக்கும் அமெரிக்கா கடுமையான பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் சேவை வரியை அமல்படுத்தும் எந்த நாட்டாக இருந்தாலும், அந்த நாடு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் உடனடியாக 100 சதவீத சுங்க வரி விதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். மேலும், ஏற்கனவே அந்த நாடுகளுடன் செய்யப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் இருந்தாலும், அவற்றை ரத்து செய்ய அமெரிக்கா தயங்காது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் வரிச்சுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்றும், இதுபோன்ற முடிவுகளை எடுத்தால் அதற்கு உடனடி பொருளாதார நடவடிக்கைகள் மூலம் பதிலளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், உலகின் இரண்டு முக்கிய பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே புதிய வர்த்தக பதற்றம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சுங்க வரி உயர்வு அமல்படுத்தப்பட்டால், பல்வேறு பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பாதிப்பு ஏற்படுவதுடன், சர்வதேச சந்தைகளிலும் தாக்கம் ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். டிஜிட்டல் வரி விவகாரத்தில் அடுத்த சில நாட்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் முடிவுகள் உலக வர்த்தகத்தின் திசையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!