இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளில் திமுக, தவெக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் தொகுதி தாவேக வேட்பாளர் மரகதம் குமரவேல், அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனிடையே, அனந்தமங்கலம், சிறுதாமூர் பகுதிகளில் பிரச்சாரத்திற்கு சென்ற மரகதம் குமரவேலை கிராமத்திற்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அவரது பிரச்சார வாகனத்தை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காலை உணவு விரிவாக்க திட்டத்தில் குளறுபடி... 4 பல்பு, 1 பேன் ரூ.33 ஆயிரமா?... தவெக எம்.எல்.ஏ. பேரதிர்ச்சி...!
தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யா, குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரித்தார். முத்தூர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்குச் சென்ற வேட்பாளர் சுகன்யாவின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது பேசிய சுகன்யா, “வாக்கு சேகரிப்பதற்காக வந்திருந்தேன். மக்கள் என்னை உற்சாகமாக வரவேற்றனர். கண்டிப்பாக இந்த தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் திமுகதான் வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இப்போது இருக்கிற வேட்பாளரைப் பற்றி மக்கள் நன்றாகத் தெரிந்துகொண்டுள்ளனர். போகும் பக்கம் எல்லாம் வரவேற்பு இல்லாத நிலை இருக்கிறது. உள்ளேயே அனுமதிக்காத நிலைமையிலும் இருக்கிறார்கள்.
நான் கண்டிப்பாக திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக சட்டமன்றத்திற்குச் சென்று நிற்பேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தவெக்ச் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், குண்டடம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர் விஜய் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், விசில் சின்னத்தில் போட்டியிடும் தாவேக வேட்பாளர் சத்தியபாமாவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“இந்தத் தேர்தலில் நம்முடைய வேட்பாளர் வெற்றி பெறுவதன் மூலம், தாராபுரத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியிருக்கிறது என்ற வரலாற்றைப் படைக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். திருமதி சத்தியபாமா பொன்னுசாமிக்கு மாபெரும் வெற்றியை நீங்கள் ஈட்டித் தர வேண்டும் என்று உங்கள் பொற்பாத மலர்களை வேண்டுகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, வேடம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சத்தியபாமாவை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பிச் சென்றார்.
மதுராந்தகம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி, மதுராந்தகம் நகர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். வன்னியர்பேட்டை, பிள்ளையார் கோவில் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோகானந்தன் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநிலச் செயலாளரும், தற்காலிக சபாநாயகருமான அன்பழகன், தமிழகத்தைப் போன்று ரீல்ஸுக்காகவும், சினிமா மோகத்திற்காகவும் வாக்களிக்கக்கூடிய மக்கள் புதுச்சேரியில் இல்லை என்று தெரிவித்தார்.
அப்போது அவர், “தட்டாஞ்சாவடி மக்கள் ஏமாளிகள் அல்ல. இந்த ரீல்ஸையெல்லாம், கில்ஸ் பார்த்து ஓட்டு போடுகிறவர்கள் அல்ல. சினிமா முகத்தைப் பார்த்து ஓட்டு போடுகிற மக்களும் கிடையாது.
இந்த மக்கள் பலமுறை வாக்களித்து முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்த மக்கள். பலமுறை முதலமைச்சரைத் தேர்ந்தெடுத்த மக்கள் இவர்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் தயவில்தான் தவெக ஆட்சி! மு.க.ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி!