தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக களமாடி வருகிறார். இளைஞர்கள் பட்டாலும் விஜயின் அரசியலுக்கு பெரும் ஆதரவு கரங்களாக இருக்கின்றனர். ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு விஜய் ஒரு மாற்றமாக அமைவார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக வெற்றி கழகத்திற்கு அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதல்கள் இல்லை என்றும் இதனால் விஜய் அரசியலில் நிலைப்பது கேள்விக்குறிதான் என்றும் சிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக கூறப்பட்டது.
கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், பல ஆண்டுகளாக அமைச்சராகப் பதவி வகித்தவராகவும், கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். செங்கோட்டையன், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராகக் கருதப்பட்டார்.

செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
இதையும் படிங்க: #BREAKING: செங்கோட்டையன் ராஜினாமா... தவெகவில் ஐக்கியம்? பரபரக்கும் அரசியல் களம்...!
அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைப்பேன் என்று கூறி வந்த செங்கோட்டையன் இன்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாகிகள் குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை கொடுக்க அக்கட்சி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றி கழகத்தின் அமைப்பு பொதுச்செயலாளர் என்ற பதவியை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு இணையாக செங்கோட்டை எனக்கு அதிகாரம் தரவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில் எந்த பதவி வழங்கப்பட உள்ளது என்பது தொடர்பாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படிங்க: உங்க விஜய் வரேன்... கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக புதுவைக்கு செல்லும் தவெக தலைவர் விஜய்...!