சென்னை: எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய் போன்ற அரசியல் பாணியைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. வார இறுதியில் ஒரு மீட்டிங் மட்டும் நடத்தி, வாரத்துக்கு இரண்டு அறிக்கைகள் மட்டுமே வெளியிடும் உத்தியை அவர் கையாள இருப்பதாகக் கூறப்படுகிறது.
தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலர் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளனர். முதல்வர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கியபோது, சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அவ்வப்போது மட்டுமே அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் தேர்தலில் வெற்றி பெற்றார். அதே மாதிரியான அணுகுமுறையை உதயநிதியும் பின்பற்ற விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதன் அடிப்படையில், திருச்சியில் முதல்வர் விஜய் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தபோது, உதயநிதி நேரடியாக பதிலளிக்காமல், முன்னாள் எம்.எல்.ஏ. எழிலன் மற்றும் ராஜா எம்.பி. உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து பதில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என மூத்த நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: பொறுப்பேற்ற 12 நாளிலேயே இப்படியா? திமுக கண்டனம்! தவெக விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

“எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி, பம்பரமாக சுழன்று அரசியல் செய்ய வேண்டும். ஆளும் கட்சிக்கு எதிராக தினசரி அளவில் தாக்குதல் நடத்தினால்தான் தி.மு.க. தோல்வியிலிருந்து மீண்டெழ முடியும். முதல்வர் விஜய் மேற்கொண்ட குறைந்த அளவிலான அரசியலை உதயநிதியும் செய்ய முயல்வது கட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்” என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே, ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணங்களை உடனடியாக மேற்கொள்ளவும், ஆளும் த.வெ.க. அரசுக்கு எதிராக தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளை எடுக்கவும் உதயநிதி முன்வர வேண்டும் என தி.மு.க.வினர் வலியுறுத்துகின்றனர். தற்போதைய அணுகுமுறை தொடர்ந்தால், எதிர்க்கட்சியாகவும் தி.மு.க. பலவீனப்படும் அபாயம் உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.
இந்த உள்ளடி விவாதம் தி.மு.க.வுக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதி தனது அரசியல் உத்தியை எப்படி மாற்றிக் கொள்கிறார் என்பதை அடுத்த சில வாரங்கள் தீர்மானிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: திமுக தோல்விக்கு இதுதான் காரணம்! உடன்பிறப்பின் குரல் இணையதளத்தில் கொட்டித்தீர்த்த தொண்டர்கள்!