உலக நாடுகளின் பரப்பளவை துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் புதிய உலக வரைபடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் டோகோ முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 164 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. எஸ்டோனியா, ஜார்ஜியா, லித்துவேனியா, மால்டோவா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா மட்டும் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளாக உலக வரைபடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மெர்கேட்டர் (Mercator) வரைபட முறையே இந்த விவாதத்தின் மையமாகியுள்ளது. 16-ஆம் நூற்றாண்டில் கடல் பயணங்களுக்கு உதவும் வகையில் புவியியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய இந்த வரைபடம், இன்றும் கல்வி, ஊடகம் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ பயன்பாடுகளில் பரவலாக இடம்பெற்று வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவை விளையாட்டு துறையின் உலக மையமாக மாற்றுவோம்! அகமதாபாத் விழாவில் அமித் ஷா உறுதி!
ஆனால் இந்த வரைபடத்தில் பூமியின் உண்மையான பரப்பளவு துல்லியமாக பிரதிபலிக்கப்படுவதில்லை என நீண்ட காலமாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகள் ஒப்பீட்டளவில் சிறியதாகவும், துருவங்களை நோக்கிய பகுதிகள் பெரிதாகவும் காட்சியளிக்கின்றன. இதனால் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசியா போன்ற பகுதிகளின் உண்மையான அளவு குறைவாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது.
புதிய வரைபடம் மூலம் கண்டங்கள் மற்றும் பிராந்தியங்களின் உண்மையான பரப்பளவை சமநிலையாக காட்ட வேண்டும் என்பதே தீர்மானத்தின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாடுகளின் வடிவம், திசை மற்றும் தொலைவு போன்ற முக்கிய அம்சங்களும் தொழில்நுட்ப ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வரவேற்ற இந்தியா, உலக புவியியல் குறித்த மக்களின் புரிதலில் வரைபடங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது. புதிய வரைபடம் நடுநிலையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த முறையில் உருவாக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வரைபடத்தை மாற்றுவதில் ஐ.நா. கவனம் செலுத்துவது தேவையற்றது என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது. உலக அமைதி, வளமை மற்றும் சர்வதேச நல்லுறவு போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நேபாள வெள்ள பேரழிவுக்கு இதுதான் காரணமா? செயற்கைக்கோள் படங்களில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!