ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரை கடுமையான இறக்குமதி வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் கணிசமாகத் தளர்த்தியுள்ளது. புதிய திருத்தத்தில் அதிகபட்ச வரி 100 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட முக்கிய இறக்குமதி நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
'ரஷியாவிற்கு எதிரான தடைகள் சட்டம் 2026' என்ற இந்த இரு கட்சி ஆதரவு மசோதா, அதிபர் டொனால்ட் டிரம்பின் ஒப்புதலுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அனைத்து இறக்குமதி நாடுகளுக்கும் பொருந்தும் வகையில் 500% வரி முன்மொழியப்பட்டிருந்த நிலையில், தீவிர பேச்சுவார்த்தைக்குப் பின் இப்போது உலகின் முதல் ஐந்து பெரிய ரஷிய எரிசக்தி வாங்குபவர்களுக்கு மட்டும் வரி பொருந்தும் என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும், அதிபருக்கு தேசிய நலன் அடிப்படையில் விலக்கு அளிக்கும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் மொத்த இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் 15 சதவீதத்துக்கும் குறைவாக வாங்கும் நாடுகளுக்கு முழு விலக்கு அளிக்கப்படும். இதனால் பிரான்ஸ், ஜப்பான், பெல்ஜியம் போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் பாதுகாக்கப்படும். கச்சா எண்ணெய் வாங்குபவர்களில் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் ஆகியவை முன்னிலையில் உள்ளன. எரிவாயு விஷயத்தில் சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு 180 நாட்களுக்கும் பட்டியல் மறுஆய்வு செய்யப்படும்.
இதையும் படிங்க: ”இந்த ரேட் ரொம்ப ஜாஸ்தி...” - அமெரிக்காவை வாண்டடாக வம்பிழுத்த ஈரான்... டிரம்பிற்கு நக்கல் பதிலடி...!

இந்த மசோதாவை வடிவமைத்த முன்னணி செனட்டர் லிண்ட்சே கிரஹாம் (71) உக்ரைன் பயணத்துக்குப் பின் ஜூலை 11 அன்று திடீரென இறந்தார். அவரது நினைவாக இரு கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. கிரஹாம் இறப்பதற்கு முன் டிரம்புடன் இறுதி ஒப்பந்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு சாதகம்: இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40-50 சதவீதம் ரஷியாவிடமிருந்து வருகிறது. 500% வரி அமலானால் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும். இப்போது வரி வரம்பு குறைக்கப்பட்டதுடன், டிரம்பின் விலக்கு அதிகாரம் இந்தியாவுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது. மலிவு விலை ரஷிய எண்ணெய் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பணவீக்கக் கட்டுப்பாட்டுக்கு இன்றியமையாதது. உலக சந்தையில் விலை உயர்வையும் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதா விரைவில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகும் என்று கூறப்படுகிறது. ரஷியாவின் 'நிழல்' டேங்கர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பெரிய எரிசக்தி திட்டங்கள் மீதான கூடுதல் தடைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கை உக்ரைன் போரில் ரஷியாவின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திரும்பிய திசையெல்லாம் அலறல் சத்தம்.. குவைத், பஹ்ரைன், கத்தார் மீது ஈரான் கொடூர தாக்குதல்... பற்றி எரியும் மத்திய கிழக்கு...!