இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த நடவடிக்கை குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். தேர்தல் ஆணையத் தலைமை அதிகாரிகளைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை முடக்கும் முயற்சி எனச் சாடினார்.

அசாம் போன்ற பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலங்களில் ஏன் இந்த 'SIR' நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை? தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தை மட்டும் தேர்தல் ஆணையம் குறிவைப்பது ஏன்? இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல் 2026: 5 மாநில அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அவசர அழைப்பு!
மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 58 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடியினர் (ST), பட்டியல் சாதியினர் (SC) மற்றும் சிறுபான்மையினர் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இவ்வளவு பெயர்களை நீக்கியது ஜனநாயக விரோதமானது எனச் சாடினார்.
வாக்காளர் பட்டியலைச் சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையம் நீக்கி வருகிறது. இது ஒரு தொழில்நுட்பச் சதி என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து டெல்லியில் போராட்டம் நடத்தத் தயங்கப் போவதில்லை என்றும் மம்தா எச்சரித்துள்ளார்.
மம்தா பானர்ஜி குறிப்பிட்டது போலவே, தமிழகத்திலும் இந்த 'SIR' நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் (இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில்) நீக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். கேரளாவிலும் இந்த நடவடிக்கைக்கு எதிராக அம்மாநிலச் சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் தரப்பில், வாக்காளர் பட்டியலின் தூய்மையை பேணவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது; இதில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள வாக்காளர்கள் மீண்டும் தங்களைப் பதிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே ஆப்பில்..!! ECINet டிஜிட்டல் தளம் அறிமுகம்..!!