தமிழ் திரையுலகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய விவகாரம் என்றால், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன் ரூ.6 கோடி பணத்தை திருப்பி தரக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விவகாரம் தான். இதற்கு காரணம், கடந்த 2024ம் ஆண்டு ரவி மோகனுடன் அந்த நிறுவனம் இரு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ததாகவும், அதற்காக ரூ.6 கோடி முன்பணம் அவர் பெற்றதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரவி மோகன் எந்தவித கால்ஷீட்டும் அளிக்காமல் இருந்ததால், படப்பிடிப்பை துவக்க முடியாமல் போனதாகவும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை சுட்டிக்காட்டியும், பாபி டச் கோல்டு நிறுவனம் நீதிமன்றத்தில் ரவிமோகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும், ரவி மோகன் இந்த முன்பணத்தை தனது சொந்த தயாரிப்புகளுக்காக அல்லது தனிநபர் செலவுகளுக்காக பயன்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்நிலையில் அவர் தயாரிக்க உள்ள புதிய படமான 'ப்ரோ கோட்' படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும், பிற நிறுவனங்களின் தயாரிப்புகளிலும் நடிக்க தடை விதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக ரவி மோகன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வழக்கு விசாரணையானது வரும் ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சனியன் சகடை' புகழ் கோட்டா ஸ்ரீனிவாசன் இன்று காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!
இந்த திடீர் சர்ச்சையால் நடிகர் ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவிமோகன் ஸ்டுடியோஸ் மூலம் தயாராகி வரும் 'ப்ரோ கோட்' திரைப்படத்திற்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இதில் ரவி மோகனே கதாநாயகனாகவும் நடிக்கிறார். அவருடன், பிரபல நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இடம்பெறுகிறார். இப்படத்தை வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டிக்கிலோனா ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்குகிறார்.

இப்படம் பற்றி அறிவிக்கப்பட்டதிலிருந்து, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் தற்போது இந்த முன்பணம் தொடர்பான வழக்கு விவகாரம், படம் தயாராகுமா என்ற அச்சத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த வழக்கு தமிழ் சினிமா வட்டத்தில் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், நடிகர் ரவி மோகனின் புதிய தயாரிப்புக்கும் தடையாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ரூ.6 கோடி நஷ்டஈடு குறித்து பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை தொடங்காததால் நஷ்ட ஈடாக ரூபாய் 10 கோடி வழங்க வேண்டும் என ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரவிமோகன் தரப்பு வக்கீல் எஸ். கார்த்திகை பாலன், ''நடிகர் ரவிமோகன் மனுதாரரின் நிறுவனத்திடம் முன்பணமாக ரூ. 6 கோடி பெற்றது உண்மை தான். ஆனால் கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்காததால் ரவிமோகனுக்கு ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான பாதிப்புகளுக்கு பொறுப்பேற்று நஷ்ட ஈடாக ரூ. 10 கோடி வழங்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார்.
இதையடுத்து, இந்த வழக்கிற்கு நடிகர் ரவிமோகன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: ஹேக்கிங் லிஸ்டில் நடிகர் உன்னி முகுந்தன்.. பேஸ்புக்கில் அவரே போட்ட பதிவு..!