ஹாலிவுட் சினிமா உலகத்தை புரட்டிப் போட்ட 'அவதார்' திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ‘அவதார்: பைர் அண்ட் ஆஷ்’ படம் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல் நிமிடத்திலேயே ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய இந்த டிரெய்லர், இணையத்தில் தற்போது மில்லியன் கணக்கில் பார்வைகள் பெற்றுவருகிறது. இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கிய பண்டோரா உலகம், உலக சினிமாவின் புரட்சிகரமான வித்தியாசமான கற்பனை சினிமா பிரபஞ்சமாக அமைந்துள்ளது. 2009-ம் ஆண்டு வெளியான முதல் பாகமான ‘அவதார்’, அதன் நேர்த்தியான 3D தொழில்நுட்பம், கண்கொள்ளா காட்சிகள் மற்றும் உணர்வு பூர்வமான கதைக்களம் ஆகியவற்றால் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிங்க: "கூலி" படத்தில் கேமியோ சூர்யாவா..! அடுத்த படம் சரவெடி தான் லோகேஷ் கனகராஜ் அதிரடி..!
அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகமான ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ உலகளவில் ரூ.2000 கோடிக்கு மேல் வசூலித்து சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக அமைந்தது. மூன்றாம் பாகத்தின் பெயராக ‘பைர் அண்ட் ஆஷ்’ எனத் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் டிரெய்லர் வெளியானது ரசிகர்களிடையே பெரும்எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதன்படி, டிரெய்லரில் பண்டோரா உலகம் புதிதாக மாறிய ஒரு பிரபஞ்சத்தைக் காட்டுகிறது. இதுவரை நீர், மரங்கள், உயிரினங்கள் என இயற்கையின் அழகை வெளிப்படுத்திய பண்டோரா, இப்போது தீ மற்றும் சாம்பலின் தீவிர தாக்குதலுக்குள்ளாகிறது. புது வில்லன்கள், புதிய ஜீவிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக அபூர்வமாக உருவாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் முன்னணி கதாப்பாத்திரமான ஜேக் சல்லி மற்றும் நெய்டிரி ஆகியோர் மீண்டும் திரும்பி வருகிறார்கள். இவர்களது குடும்பம் மற்றும் இனத்தின் மீது வந்திருக்கும் புதிய ஆபத்து, அவர்களது மனதளவிலும் உடல் அளவிலும் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை டிரெய்லர் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, ‘We must rise from the ashes’ என்கிற வசனம், இந்தப் படத்தின் தலைப்புடன் நேரடியாக தொடர்பு படுகிறது. மேலும் தீயின் தாக்கம், சாம்பல் நிறங்கள், சிகப்பு மற்றும் ஆரஞ்சு மேகங்கள், பண்டோராவின் வனப்போக்கும் உயிரோடும் கலக்கும் விதம், ஒரு புதிய விசுவலை உருவாக்கியுள்ளது. இந்த படம், சுற்றுச்சூழல் அழிவுகள் மற்றும் மனிதன் இயற்கையின் மீது செலுத்தும் அக்கிரமங்கள் பற்றிய கடுமையான அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளையும் முன்னிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே 'தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்' என்ற அனிமேஷன் படத்துடன் இணைந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்ட 'அவதார் 3' டிரெய்லர், அங்கு திரையரங்குகளில் இருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரிடமும் பரவசத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
👉🏻 Avatar: Fire and Ash | Official Tamil Trailer | In Cinemas December 19 👈🏻
இப்படம் வரும் டிசம்பர் 19-ம் தேதி உலகம் முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, ஜேம்ஸ் கேமரூன் அளித்த பேட்டிகளில், 'அவதார் 4' மற்றும் 'அவதார் 5' குறித்த பிளான் தயார் நிலையில் இருப்பதாகவும், ரசிகர்கள் ஆதரவு தொடர்ந்து இருந்தால் அந்த படங்களும் வெளிவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, 'பைர் அண்ட் ஆஷ்' படத்தின் வெற்றி, அவதார் பிரபஞ்சத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ‘அவதார்: பைர் அண்ட் ஆஷ்’ டிரெய்லர், ரசிகர்களிடையே உணர்ச்சியையும், அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியுள்ளது. பண்டோரா உலகம் தீயால் சிதையப்படும் இந்த புதிய யுக்தியில், ஜேம்ஸ் கேமரூன் புதிய பரிணாமத்தைக் காட்ட முயற்சிக்கிறார். உலக சினிமாவில் சர்வதேச தரத்தில் கற்பனை, தொழில்நுட்பம் மற்றும் மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் பிரமாண்ட முயற்சியாக இந்த மூன்றாவது பாகம் அமைவதற்கான அடையாளமாகவே இந்த டிரெய்லரை பார்க்க படுகிறது.

ஆகவே, டிசம்பர் 19-ம் தேதி திரைக்கு வர உள்ள இந்தப் படம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் முன்பதிவுகள் துவங்கும் நாளிலிருந்தே எதிர்பார்க்கப்படும். இந்த சூழலில் 'அவதார்' பிரபஞ்சம் மீண்டும் ஒருமுறை பாண்டோராவை பசுமையாக மாற்றுமா அல்லது சாம்பலாக மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்..! 'SK26' படத்துக்கு இயக்குனர் யார் தெரியுமா..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!