சிறந்த நடிப்புத்திறமை மூலம் தென்னிந்திய சினிமாவில் தனி இடத்தை பதித்துள்ள பிரபல நடிகர்கள் தற்போது சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கி தவித்து வருகின்றனர். குறிப்பாக, ஐதராபாத் காவல்துறையின் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை அடிப்படையில், அமலாக்கத்துறை பல்வேறு திரையுலக பிரபலங்களை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதில் முக்கியமானவர்களாக நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகர் ராணா ரகுபதி, நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை லட்சுமி மஞ்சு, நடிகை நிதி அகர்வால், நடிகை அனன்யா நாகல்லா, மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்ரீமுகி உள்ளிட்ட மொத்தம் 29 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் அனைவரும், 'ஜங்கிள் ரம்மி' மற்றும் பிற ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதற்காக, அந்த செயலிகளில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகள், அவை சட்டவிரோதமாக இருந்ததா, அல்லது பணமோசடி சம்பந்தமாக இருந்ததா என்பதைக் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், விசாரணைக்காக அமலாக்கத்துறை கீழ்க்கண்ட நாட்களில் பிரபலங்களை அழைத்துள்ளது. அதன்படி, ஜூலை 23–ம் தேதி நடிகர் ராணா ரகுபதி, ஜூலை 30 –ம் தேதி நடிகர் பிரகாஷ் ராஜ், ஆகஸ்ட் 6 –ம் தேதி நடிகர் விஜய் தேவரகொண்டா, ஆகஸ்ட் 13 –ம் தேதி நடிகை லட்சுமி மஞ்சுஎன அனைவரையும் அழைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது விளக்கத்தை ஏற்கனவே அளித்துள்ளார்.

அதில், "நான் 2016-ம் ஆண்டு ஜங்கிள் ரம்மி விளம்பரத்தில் பங்கேற்றேன். எனினும், அந்த ஒப்பந்தம் ஒரு வருடத்திற்குள் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, எந்த ஆன்லைன் ரம்மி தளத்தையும் விளம்பரப்படுத்தவில்லை” என அவர் உறுதியாக தெரிவித்தார். இதேபோல் மற்ற நடிகர்களும் அமலாக்கத்துறையின் விசாரணையில் தங்களது நிலைப்பாடுகளை விளக்க உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் உண்மையில் எந்த அளவிற்கு அந்த செயலிகளின் விளம்பரங்களில் ஈடுபட்டிருந்தனர், அந்த செயற்பாடுகள் சட்டபூர்வமானதா அல்லது மோசடிக்கு வழிவகுத்ததா என்பதை நிரூபிக்க தேவையான ஆதாரங்கள் தேடப்பட்டு வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக ஐதராபாத் காவல்துறை தொடக்கத்தில் வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில், இந்திய வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரும், பணம் பரிமாற்றம், பணப்பரிவர்த்தனை தடைகள், மற்றும் மோசடி திட்டங்கள் என அனைத்திலும் விசாரணையை விரிவுபடுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பயத்தை தூண்டும் அவதார் - 3...! ‘Avatar: Fire and Ash’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு.. டிரெய்லர் விரைவில்...!
இதன் மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கப்பட்டதா மற்றும் அதனை சட்டப்பூர்வமாக கையாளப்பட்டதா என்பது முடிவுக்கு வர வேண்டும். இந்த வழக்கில், திரைத்துறை பிரபலங்களை பயன்படுத்தி, செயலிக்கு ஆதரவு பெறும் நோக்கத்தில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்து கூடுதல் தகவல்கள் தேடப்படுகின்றன. சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வீடியோக்கள் என பல்வேறு ஊடகங்களில் இந்த விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘ஜங்கிள் ரம்மி’ போன்ற ஆன்லைன் ரம்மி மற்றும் சூதாட்ட செயலிகள், இந்தியாவில் பல மாநிலங்களில் தடைசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, தமிழகத்தில், ஆந்திராவில் மற்றும் கர்நாடகாவில் கூட இதற்கான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனாலும், சில மாநிலங்களில் இந்த செயலிகள் சட்டபூர்வமாக இயங்குகின்றன என்பதாலும், இதற்கான சட்டப்பூர்வ நிலை தெளிவாக இல்லாதது என்பதாலும் தான் இது போல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில், பிரபலங்கள் விளம்பரத்தில் பங்கேற்கும் முன், அந்த தயாரிப்புகள் சட்டபூர்வமானதா என்பது குறித்து தெளிவாக ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அந்த விளம்பரங்கள் மூலம், பொது மக்களுக்கு தவறான தகவல்களும், தவறான வழிகாட்டுதலும் வழங்கப்படலாம் என அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில், ‘ஜங்கிள் ரம்மி’ மற்றும் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலிகளை சுற்றி உருவாகும் பணமோசடி, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பிரபலங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகள்ஆகியவை தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இந்திய திரையுலகத்தில் புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இந்த நிலையில், வரும் நாட்களில் நடைபெற உள்ள விசாரணைகளின் முடிவுகள், இந்த வழக்கில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 29 பிரபலங்கள் மீது தொடரப்பட்ட இந்த வழக்கு, திரைத்துறையிலும் விளம்பரத்துறையிலும் புதிய ஒழுங்கு முறைகளை உருவாக்கும் வாய்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதையும் படிங்க: அதிரடியாக பிசினஸில் இறங்கிய ராஷ்மிகா மந்தன்னா..! புதிய பிராண்ட் அறிமுகம்.. விஜய் தேவரகொண்டா வாழ்த்து..!