தமிழ் சினிமாவில் வில்லனாகத் தொடங்கி, இயக்குநராக தனக்கென ஓர் இடத்தை உருவாக்கியுள்ளார் பொன்முடி திருமலைசாமி. ‘பையா’, ‘கருங்காலி’, ‘வி3’ போன்ற படங்களில் வில்லன் வேடங்களில் அவரது நட்ப்புத்திறமைக் காட்டியிருந்தாலும், தற்போது அவர் எடுத்து இயக்கியுள்ள ‘பிஎம்டபிள்யூ 1991’ படம் தான் அவரது புதிய அடையாளமாக மாறியுள்ளது. அதன்படி, வில்வங்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்தப் படம், ஏற்கெனவே 22 சர்வதேச விருதுகளை வென்றுள்ளதோடு, பல்வேறு திரைப்பட விழாக்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய இயக்குநருக்கே இத்தனை விருதுகள் என்பது தமிழ் சினிமாவிற்கே பெருமையாக உள்ளது.
ஆனால், இந்தப் படத்தின் உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கும் கதையும், சவாலும் சினிமா உலகில் மாபெரும் உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் மாறி இருக்கிறது என்றால் நம்ப முடியுமா.. ஆம்.. தன்னை இயக்குநராக மாற்றிய சாதனையின் உண்மையான தூண் குறித்து பொன்முடி திருமலைசாமி சொன்னதிலிருந்து, அவரது உணர்வுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவர் இயக்கிய 'சோம பான ரூபசுந்தரம்' என்ற படத்தில் நடிகர் விஷ்ணு பிரியன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் முற்றிலும் நிறைவு பெறாமல் நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சமயத்தில், அவரிடம் நடிகை ஐஸ்வர்யா தத்தா "அடுத்ததாக என்ன படம் எடுக்கப் போகிறீர்கள்?" என கேட்டிருக்கிறார். அந்தக் கேள்விக்கு உணர்ச்சி காய்ந்த மனநிலையில், "ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் ஒரு படம் எடுக்க போகிறேன்" என்று பதிலளித்துள்ளார் இயக்குநர். இந்த பதிலை கேட்டு, நடிகை கோபமடைந்ததாக பொன்முடி கூறுகிறார். ஆனால் அச்சமயம் அவர் கோபத்தில் சொன்ன அந்த வார்த்தையே, அவரை ஒரு புதிய சிந்தனையின் வழியில் கொண்டு செல்ல வைத்ததாம். ஏனெனில் அப்பொழுது தான் "நம்மால் உண்மையிலேயே ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் ஒரு திரைப்படம் எடுக்க முடியுமா?" என்ற ஒரு கேள்வி அவரது மனதில் வந்துள்ளது. இதுவே ‘பிஎம்டபிள்யூ 1991’ என்ற திரைப்படத்திற்கான வித்திடப்பட்ட தருணம்.

ஆகவே இந்தப் படம் முக்கிய நடிகர்கள் இல்லாமல், கதையையும், பார்வையாளரின் உணர்வுகளையும் வழிநடத்துகிறது. இது ஒரு அழுத்தமான சோதனை படம் தான். ஆனால் பொன்முடி திருமலைசாமி அதை வெற்றிகரமாகச் செய்திருக்கிறார் என்பதற்கே சர்வதேச விருதுகள் அமைந்துள்ளன. அவர் கூறியதுபோல, "நடிகை ஐஸ்வர்யா தத்தாவிடம் விட்ட சவாலுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கினேன். இன்று அது எனது இயக்குநர் வாழ்க்கையின் முக்கியமான புள்ளியாக மாறியுள்ளது" என்றார். இது அவரது தன்னம்பிக்கையையும், முயற்சியின் வலிமையையும் வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது. ஒரு கதாபாத்திர நடிகராக வலம் வந்தவர், இயக்குநராக உருவெடுக்க, சாதாரணமான சிந்தனையோ, சாதாரணமான சூழலோ போதாது. ஆனால் பொன்முடியின் வாழ்க்கையில் வந்த கோபம், தோல்வி, கேள்வி என அனைத்தும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளமாக மாறி இருக்கிறது. இயக்குநர் எனும் இடத்திற்குள் நுழைந்து, சினிமாவின் புதிய வடிவங்களை உருவாக்கும் தைரியம் அவருக்குள்ளது. 'பிஎம்டபிள்யூ 1991', ஹீரோ, ஹீரோயின் இல்லாமலும், பார்வையாளரை ஆழமாகத் தொட்டுப் பேசக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது. இதன் மூலம், தமிழ் சினிமாவுக்கே ஒரு புதுமையான இயக்குநர் வந்துள்ளார் என்று கூறலாம்.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டின் பெருமையை சொல்லும் ‘வடம்’..! நடிகர் விமல் நடிப்பில் புதிய திரைப்படத்திற்கான அப்டேட்..!
சவால்கள் வெறுப்புக்கு வழிவகுக்கலாம், அல்லது சாதனைக்கான துருப்பாகவும் மாறலாம். இயக்குநர் பொன்முடி திருமலைசாமி, தனது வாழ்வின் ஒரு கேள்வியை, உலகமெங்கும் கவனம் ஈர்க்கும் ஒரு திரைப்படமாக மாற்றியுள்ளார். அதன்படி ‘பிஎம்டபிள்யூ 1991’ வெறும் படம் மட்டுமல்ல, அது ஒரு புதிய சிந்தனை, ஒரு தன்னம்பிக்கை பயணம், ஒருவர் வாழ்க்கையை மாற்றும் அனுபவம். இப்படம் விரைவில் ரசிகர்கள் மத்தியில் திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது.

பார்வையாளர்களும், இப்படத்தின் உருவாக்க பின்னணியையும் அறிந்து கொண்டு அனுபவித்தால், அது ஒரு திரைப்படத்தை மட்டுமல்ல, ஒரு மனிதனின் சாதனையையும் கொண்டாடும் நிகழ்வாக அமையும்.
இதையும் படிங்க: வெறித்தனமான திரில்லர் அனுபவம்..! ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தும் "சரண்டர்"..!