தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள ‘வள்ளிமலை வேலன்’ என்ற புதிய திரைப்படம், புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதோடு, உண்மையான உழைப்பை மதிக்கும் ஒரு முயற்சியாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. 'எம்.என்.ஆர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை எம். நாகரத்தினமே தயாரித்து நடித்திருக்கிறார். இப்படத்தை எஸ்.மோகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் கதையும் திரைக்கதையும் அவரே எழுதியுள்ளாராம். மேலும், இப்படத்தின் மூலம் பல வருடங்களாக சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை இலக்கியா, தற்போது முதன் முதலாக இப்படத்தின் மூலமாக முன்னணி ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில், ‘நான் கடவுள் ராஜேந்திரன், நகைச்சுவை நடிகர் செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை, காவிரி மகிமா, கணபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் ஒளிப்பதிவை மணிகண்டன் செய்துள்ளார். இசை ஏ.கே.ஆல்ட்ரின் அமைத்துள்ளார். இப்படி இருக்க, சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கதாநாயகியான இலக்கியா பேசியது தற்பொழுது பலரது கவனத்தை பெற்றுள்ளது. அதன்படி அவர் பேசுகையில், "நான் காவிரி பாயும் தண்ணீரால் வளம் பெற்ற மண்ணில் பிறந்தவள். அப்படிப்பட்ட நான் சென்னையில் வளர்ந்தேன். இன்று பல முயற்சிகளை கடந்து உங்கள் முன்னால் இப்படி ஹீரோயினாக நிற்பது உண்மையிலேயே எனக்கு ஒரு கனவு நடந்த மாதிரி தான் இருக்கிறது. நானெல்லாம் கதாநாயகியாக இருப்பேனா என்று எனக்கே ஒரு கட்டத்தில் நம்பிக்கையில்லாம இருந்தது. ஆனால் இன்று அது நடந்து விட்டது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் சினிமாவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. அந்த நான்கு ஆண்டுகளில் பல சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரங்களை நான் சிறந்த முறையில் முழு முயற்சியுடன் செய்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய நம்பிக்கையோடும், முயற்சியோடும் தான் அதனை செய்து வந்தேன்.

இன்று ‘வள்ளிமலை வேலன்’ என்ற படம் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருப்பதை மகிழ்ச்சியாக உணர்கிறேன். சினிமாவில் பலர் குறுக்கு வழியில் முன்னேறுகிறார்கள். சிலர் வாய்ப்பு பெறுவதற்காக கெஞ்சுகிறார்கள். ஆனால் உண்மையாக உழைக்கும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு என்பது அதிகம் கிடைப்பதில்லை. இது என் தனிப்பட்ட அனுபவம். இந்தத் துறையில் உழைக்கும் ஒவ்வொருவரும் நான் சொன்னதை கண்டிப்பாக உணர முடியும். அந்த வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்றால், நம் கலைத்துறையில் உள்ள தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், அதிகமாக திறமைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை அனுபவித்தவளாக நான் இன்று பேசுகிறேன். எனக்கு இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தைக் கொடுத்து, என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர் எஸ். மோகனுக்கும், தயாரிப்பாளர் எம்.நாகரத்தினத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
இதையும் படிங்க: என் சாவுக்கு நடிகர் பாலா தான் காரணம்...! வாக்கு மூலத்துடன் வீடியோ வெளியிட்ட மூன்றாவது மனைவி..!
ஒரு பெண், ஒரு புதிய முகம், ஒரு சின்ன முயற்சி என இதையெல்லாம் உணர்ந்து எனக்கு ஒரு வாய்ப்பளித்தது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படத்தில் என்னுடன் வேலை செய்த ஒவ்வொருவரும் எனக்கு அதிகமாக ஆதரவு கொடுத்தார்கள். ஹீரோக்கள், நகைச்சுவை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரிடமிருந்தும் பெற்ற ஆதரவை என்னால் மறக்க முடியாது. உழைப்பினால் உச்சிக்கு செல்ல முடியும் என்பதை ‘வள்ளிமலை வேலன்’ எனக்கு மீண்டும் நினைவூட்டியது. ஆகவே, எனக்கு எதிர்காலத்திலும் இப்படி தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்க, நீங்கள் அனைவரும் எனக்கு அதிகளவு ஆதரவு கொடுக்க வேண்டும். உங்கள் கைதட்டல்கள் தான் என் வெற்றியின் முதல் படிக்கட்டு. உங்கள் அன்பும், ஊக்கமும் இருந்தால் இன்னும் பல படங்களில் என்னால் ஹீரோயினாக நடிக்க முடியும்" என நெகிழ்ச்சி பொங்க பேசினார். இலக்கியாவின் இந்த பேச்சு, விழாவில் இருந்த பலரது கண்களில் கண்ணீர் வரச் செய்தது. ஒரு சாதாரண துணை நடிகையாக இருந்து, பலமுறை போராடி, நம்பிக்கையுடன், வளர்த்து இன்று ஹீரோயினாக மாறிய ஒரு பெண்ணின் கதையாக அவர் பேசியது இருந்தது. சமூக வலைதளங்களிலும், எனவே 'வள்ளிமலை வேலன்' திரைப்படம் வெறும் கதை மற்றும் காட்சி அல்ல. இதில் உள்ள பல கலைஞர்களின் உழைப்பும், சினிமாவை நேசிக்கும் அவர்களது மனதையும் பிரதிபலிக்கிறது.

இந்த படத்தின் மூலம் இலக்கியா எனும் புதிய நாயகி தமிழ் திரையுலகில் உருவாகி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த "வள்ளிமலை வேலன்" திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இது ரசிகர்களிடையே எப்படிப்பட்ட வரவேற்பை பெரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மும்பை மோசடி வழக்கு: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு பறந்த சம்மன்..!