தென்னிந்திய திரையுலகில், குறிப்பாக கன்னட சினிமாவில், தனக்கென ஒரு பிரத்தியேகமான ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி கொண்டவர் கிச்சா சுதீப். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையுடன் கலக்கும் இவர், தற்போது தனது கடந்த கால வாழ்க்கையை எண்ணி உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கல்லூரி நாட்களில் ஆரம்பமான சினிமா கனவு, குடும்ப எதிர்ப்பு, தொடர் தோல்விகள், சீரியல் பயணம், மீண்டும் திரும்பிய திரையுலக வெற்றி என ஏராளமான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த தனது வாழ்க்கைப் பயணத்தை, கிச்சா சுதீப் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், " நான் 12-வது படிக்கும் போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. படம் பார்க்க ரொம்ப பிடிக்கும். சினிமா இல்லாட்டி கிரிக்கெட் வீரராகவே இருக்க வேண்டும் என்பது தான் முதல் ஆசை. ஆனா, எங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவர். எனக்கு ஆர்வமே இல்லாத இன்ஜினியரிங் பாடத்திலேயே படிக்க சேர்த்தார். அதேபோல் நான் நடிச்ச முதல் மூன்று படங்களும் பிளாப். நடிப்பு சரியாக வரவில்லை என நினைத்தேன். அந்த சூழ்நிலையில் சீரியல் பக்கம் போனேன். அங்கே துணை நடிகர் கதாப்பாத்திரம். ஆனால் ‘இதையாவது நன்றாக செய்யவேண்டும்’ என்று உறுதியுடன் நடிக்க ஆரம்பித்தேன். தமிழில் விக்ரம் சார் நடித்த ‘சேது’ படம் ஒரு கலக்கல் வெற்றிப் படம். ஆனால் அது ஒரு சிக்கலான சூழ்நிலையில், தியேட்டரில் இரண்டு முறை வெளியானதும், பின்னர் ரசிகர்கள் ஆதரவு கிடைத்ததும், பெரிய வெற்றியாக மாறியது. நான் அந்தப் படம் ரீமேக் செய்ய வேண்டாம் என நினைத்தேன். ஆனால் கடைசியில், அந்தப் படமே எனக்கு வாழ்க்கையின் முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. அந்த படம் தான் எனக்கு ‘கிச்சா’ என்ற அடைமொழி மற்றும் பிரபலமான பெயர் கொடுத்தது.

அந்தப் படத்தின் போது என் கால் முறிந்திருந்தது. படப்பிடிப்பின் முழு காலத்தையும் அந்த வலியோடு தான் நடித்தேன். அதுவே எனக்கான முதல் மிகப்பெரிய வெற்றியாக மாறியது. படம் வெளியான நாள், படம் பார்த்து ரசிகர்களின் எதிர்வினைகளை காணச் தியேட்டருக்கு சென்றேன். அங்கிருந்த தியேட்டர் மேனேஜர் என்னை பார்த்து ‘வாழ்த்துகள் சார்’ என்றார். அது எனக்கு ஒரு புதுவிதமான உணர்வு. அதே நேரத்தில் ஒரு ரசிகர் என்னை பார்த்ததும், என் பெயரை மறந்துவிட்டு ‘நீ தானே கிச்சா’ என்று சொல்லி உற்சாகமாக வரவேற்றார். அந்த தருணம் தான் என் வாழ்க்கையின் உச்சம் போல உணர்ந்தேன்" என்றார். இப்படியாக தொடர்ந்து மிகுந்த விருதுகளும் புகழும் பெற்ற கிச்சா சுதீப், தற்போது கன்னட சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமல்ல, பல்வேறு மொழிப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் புகழ் பெற்றவராக திகழ்கிறார்.
இதையும் படிங்க: வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி...! ‘முத்து என்கிற காட்டான்’ சீரிஸுக்கு குவியும் ஆதரவு..!
'ஈக', 'பெஹேல்வான்', 'விக்ராந்த ரோனா', போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ள அவர், தமிழிலும் சில முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களிடையே அவர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். சுதீப் பகிர்ந்த வீடியோ மற்றும் உருக்கமான பேச்சு, சமூக ஊடகங்களில் ரசிகர்களை நெகிழ வைக்கும் விதமாக பரவி வருகிறது. அவரது வாழ்க்கைப் பயணத்தின் உண்மை, எவ்வளவு கடினமான பாதையில் வெற்றியை நோக்கி பயணித்தார் என்பதைக் காட்டுகிறது. அதனால் தான், வலியோடு வாழ்த்துகளும் கிடைக்கின்றன என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என ரசிகர்கள் கூறுகின்றனர். மொத்தத்தில் நம்பிக்கை, மனோதைரியம், வலியையும் சகித்துத் தாங்கும் சக்தி என இந்த மூன்றும் இருந்தாலே வெற்றி நிச்சயம் எனச் சொல்லக்கூடிய உதாரணமாக கிச்சா சுதீப்பின் வாழ்க்கை விளங்குகிறது.

இது போல அவரது நெஞ்சை நெகிழ வைக்கும் அனுபவத்தை பகிர்ந்த வீடியோ, புதுமை, ஊக்கம், மற்றும் உந்துதலை தேடும் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு தூண்டுகோல் போல அமைந்துள்ளது. ஆகவே நடிகர் கிச்சா சுதீப்புக்கு எதிர்காலப் படைப்புகளில் மேலும் வெற்றிகள் குவிய ரசிகர்கள் மற்றும் திரையுலகம் முழுமையாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமண நாளை இப்படியும் கொண்டாடலாமா..! நிக்கோல் சச்தேவ் – வரலக்ஷ்மி பகிர்ந்த வீடியோ வைரல்..!