தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் தனக்கென இடத்தைப் பெற்று இன்று பிரபலமாக வலம் வருபவர் தான் நடிகை நிவேதா தாமஸ். ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாகவும், ‘பாபநாசம்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாகவும், மேலும் ‘ஜில்லா’ திரைப்படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதே நேரத்தில், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் கதாநாயகியாக பல திறமையான வேடங்களில் நடித்துள்ளார்.
இப்படி இருக்க, தற்போது, நிவேதா தாமஸ் மீண்டும் ஒரு காரணத்திற்காக சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளார். காரணம், அவர் சமீபத்தில் எடுத்த உடல் மாற்றம் மற்றும் அதன் பின்னணி தான். சில மருத்துவச் சிக்கல்களின் காரணமாக நிவேதா தாமஸ் எடை அதிகமாக கூடி இருந்தார். இதனால், சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகமாக பரவி உருவக்கேலிகள் மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறார்.
இருப்பினும், உங்களது எந்தவித கேலிகளும் கிண்டல்களும் என் மனதை பாதிக்காது என தைரியமாக பேசியிருக்கிறார் நிவேதா. அதன்படி அவர் பேசுகையில், " நான் உடல்நலச் சிக்கல்களை அதிகமாக எதிர்கொண்டு வந்தேன். அதன் விளைவாகவே எனக்கு எடை கூடியது. ஆனால் அதில் எனக்கு வெட்கமோ, அவமானமோ இல்லை. உருவம் மட்டுமே ஒரு மனிதரின் அடையாளம் அல்ல. என்னை உருவக்கேலிகளால் ஒருபோதும் வீழ்த்திவிடவோ அல்லது பாதிப்புள்ளாக்கவோ முடியாது. என் மனதின் வலிமை தான் என் ஆளுமை" என தைரியமாக தெரிவித்துள்ளார்.

இப்படி தன்னம்பிக்கையுடன் அவர் பேசியதை கேட்ட, நிவேதாவின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டுவதுடன் அவருக்கு ஆதரவையும் கொடுத்து வருகின்றனர். இந்த மாற்றங்கள் நடப்பதற்கும் முன்னர், அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘35’ (Thirty-Five) வசூலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு பெண் கதாபாத்திரத்தையே மையமாகக் கொண்டது. ஒரு பெண்மணியின் தனிப்பட்ட மனநிலை, வாழ்க்கை சிக்கல்கள் மற்றும் அதிலிருந்து மீளும் போராட்டத்தை மையமாகக் கொண்டு, நிவேதா தாமஸ் அதில் மிகவும் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தில் வெளிப்படையாக பேசிய நடிகை பவானிஸ்ரீ..! அதிர்ச்சியில் சினிமா வட்டாரங்கள்..!
இந்தப் படத்தில் நடித்ததற்காக, நிவேதா பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். தற்போது, நிவேதா தாமஸ் புதிய கதைகளை கேட்டு வருகின்றாராம். "கதை முக்கியம் தான். அது மனதில் நின்றால் மட்டுமே நடிக்கிறேன். திரைக்கதையுடன் உரையாடும் தன்மை எனக்கு வேண்டும் " எனவும் அவர் கூறியிருக்கிறார். ஒரு நடிகையாக மட்டுமல்லாமல், சமூகத்தில் பெண்கள் எப்படி தங்களை பார்க்க வேண்டும், உடலுறுப்புகள் மட்டுமல்ல, உள்ளுணர்வுகள் தான் ஒரு நபரின் முழுமை பன்பை உணர்த்தும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்பட உலகத்தில் தோற்றத்தைப் பெரிதாகக் கருதி வரும் சூழலில், நிவேதா தாமஸ் தனது தைரியமான எண்ணங்களாலும், திறமையான நடிப்பாலும், தனக்கென ஒரு வலுவான அடையாளத்தை நிரூபித்து வருகிறார். உருவம் அல்ல, உண்மைத் திறமையே வெற்றியின் மையம் என்பதை நிரூபித்து இருக்கிறார். அவர் எதிர்கொள்ளும் புதிய படங்களும், அவரது பயணமும், ரசிகர்களிடையே ஒரு பெண் நடிகை எப்படி சினிமாவில் பயணத்தைத் தொடர முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆகவே, உண்மையான அழகு உடலில் இல்லை, மனதில் தான் இருக்கிறது என்பதை வாழ்வில் நடத்தி காட்டி இருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த நடிகை இலக்கியா..! 'வள்ளிமலை வேலன்' திரைப்படத்தில் தோன்றி கலக்கல்..!