Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "சொட்ட சொட்ட நனையுது". இன்றைய தலைமுறையை குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நகைச்சுவை மயமான முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி வெங்கட், ஷாலினி, மற்றும் ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படவிருக்கிறது.
இப்படி இருக்க இந்தப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் படக்குழுவினரும், பத்திரிக்கை ஊடக நண்பர்களும், திரையுலகத்தின் முக்கிய முகங்களும் கலந்து கொண்டனர். விழாவில், படத்தின் முன்னிலை நடிகர்கள், இயக்குநர் மற்றும் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். இதில் நடிகை வர்ஷிணி வெங்கட் பேசுகையில், " ‘சொட்ட சொட்ட நனையுது’ எனும் தலைப்பே ஒரு அனுபவமாக இருக்கிறது. இந்தப்படத்தில், முடி எவ்வளவு முக்கியம் என்றும், அதே நேரத்தில் எவ்வளவு முக்கியமில்லை என்றும் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம். எனக்கு நாயகியாக நடிக்க வாய்ப்பு வழங்கிய இயக்குநர் நவீத் மற்றும் தயாரிப்பாளருக்கு மனமார்ந்த நன்றி. என் கனவு இந்தப் படத்தின் மூலம் நனவாகியுள்ளது " என கூறினார்.

அவரை தொடர்ந்து படத்தில் முக்கிய நகைச்சுவை வேடத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், " என் வளர்ச்சியில் பத்திரிக்கை நண்பர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்களுக்குப் பெரும் நன்றி. இந்த ‘சொட்ட சொட்ட நனையுது’ படம் என் ‘ஜாதிக்காரன் படம்’. அது வேறு ஏதாவது ஜாதி இல்ல. நகைச்சுவை ஜாதி தான். முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படம் இது. நீங்கள் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. எங்கள் இயக்குநர் நவீத் S ஃபரீத், மிகவும் அழகாக படத்தை இயக்கியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் நடித்த ஹீரோ நிஷாந்த் ரூஷோ, தனது ஐந்து படங்களில் வந்த தோற்றத்திலிருந்தும் விலகி, முழுமையாக வேறுபட்ட ஒரு கெட்டப்பில் நடித்துள்ளார். அவர் மேடையில் கூட அந்த தோற்றத்துடன் வந்தது மிகப்பெரிய விஷயம். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து, தனது வருங்கால இயக்குநர் திட்டங்களிலும் 'யாரு ராஜா' மற்றும் 'வினோத்' ஆகியோர் பணியாற்ற உள்ளதாக" தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய 'கிங்டம்' படம்..! சென்னை ஐகோர்ட் கொடுத்த அதிரடி உத்தரவு...!
இப்படியாக "சொட்ட சொட்ட நனையுது" என்பது, இன்றைய காலத்தில் பரபரப்பான வாழ்க்கை, தனித்தன்மை, தன்னம்பிக்கை, மற்றும் மாற்றங்களை ஏற்கும் மனநிலை ஆகிய அம்சங்களை நகைச்சுவை மற்றும் குடும்ப பொழுது போக்காக வெளிப்படுத்தும் முயற்சி எனத் தெரிகிறது. முடி என்ற ஒரு சின்ன விஷயத்தை மையமாக வைத்து, அதை பெரிதும் வாழ்க்கைப் பாடமாக மாற்றும் வகையில் கதையை சொல்லியிருக்கிறார்கள். இது இணைய தலைமுறையினரிடையே நிச்சயமாக ஒரு மீம் வெடிப்பையும், சிந்தனையையும் உருவாக்கக்கூடும்.
இப்படி இருக்க படத்தில் அறிமுக இயக்குநர் நவீத் S ஃபரீத் தனது முதல் படத்திலேயே புதுமையான அணுகுமுறையுடன், கதையை இயக்கியுள்ளார். நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி என புதிய நட்சத்திரங்களின் நடிப்பும், படத்தில் இணைந்த நகைச்சுவை கூறுகளும், இத்திரைப்படத்திற்கு ஒரு தனித்துவத்தை ஏற்படுத்துகிறது. இசை, ஒளிப்பதிவு, கலையமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப அணிகள் பற்றிய முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படக்குழுவினர் தற்போது விரைவாக ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். படத்தின் டிரெய்லரும் இசை வெளியீடும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சினிமாவில் களமிறங்கும் சிவாஜி கணேசனின் மற்றொரு பேரன்..! ஹீரோவாக அறிமுகமாகும் தர்சன் கணேசன்..!