தமிழ் இலக்கியத்தின் முக்கியமான உன்னதக் கவிதைப் பொருளாகவும், உலகின் அனைத்து செயல்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் ஒழுக்க நெறி நூலாகவும் போற்றப்படும் திருக்குறளை அவமானப்படுத்தும் விதமாக பலர் பேசுவதால் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கலாசார விவாதம் எழுந்துள்ளது. தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள விவாதம் என்னவெனில், தமிழரின் பெருமைக்குரிய நூலான திருக்குறளில் இல்லாத ஒரு "பொய்க் குறள்", மாநில கவர்னர் ஆர்.என். ரவி வழங்கிய நினைவுப் பரிசுகளில் அச்சிடப்பட்டிருப்பதாக சொல்லி எழுந்துள்ளது.
அதன்படி, முதலில் கவர்னர் மாளிகையின் சார்பில் விவசாயம், மருத்துவம், கல்வி, சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடாத்தப்பட்டது. அந்த விழாவில், கெளரவ நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட பரிசு பொருளில், "944ஆம் திருக்குறள்" என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு குறள் இடம்பெற்றது. ஆனால் அந்த குறள் திருக்குறளில் இல்லாதது என்பது பின்னர் ஆவணங்கள் மூலம் உறுதியாகி இருக்கிறது. அந்த குறள் என்னெவெனில்,
“பொய்யா நெஞ்சினார்க்குப் புன்மையெல்லாம் பொய்யாம்,
நெய்யால் விளக்கும் இருள்.”
இது திருவள்ளுவர் எழுதியது அல்ல என்பதையும், 944-ம் குறளாகவும் இது இல்லை என்பதையும், தமிழ் புலவர்கள் மற்றும் திருக்குறளில் புலமை பெற்ற அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் பரவ மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. தமிழர் பண்பாட்டு அடையாளங்களைப் பிழையோடு தாக்குவதா? தமிழர்களின் புனித நூலை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? என்ற பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த சர்ச்சையானது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், கவர்னர் மாளிகை, அந்த விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த நடிகை இலக்கியா..! 'வள்ளிமலை வேலன்' திரைப்படத்தில் தோன்றி கலக்கல்..!

இதற்காக விருது பெற்றவர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனுப்பி, அந்த நினைவுப் பரிசுகளை தாங்கள் திரும்பக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில், கவிஞரும் எழுத்தாளருமான வைரமுத்து, தனது எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பகிர்ந்து இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, 'வள்ளுவர் மறை – வைரமுத்து உரை' என்ற எனது நூலை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அதே நாளில் கவர்னர் மாளிகையில் ஒரு விழா நடந்ததாகத் தகவல். அந்த விழாவில், மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் 944-ம் திருக்குறள் என்று குறிப்பிடப்பட்ட வாசகத்தில், திருக்குறளில் இல்லாத குறளை யாரோ எழுதியிருக்கிறார்கள். இப்படி ஒரு குறள் திருக்குறளில் இல்லை. எண்ணும் தவறு யாரோ ஒரு கற்பனைத் திருவள்ளுவர் விற்பனைக் குறளை எழுதியிருக்கிறார். இது எங்ஙனம் நிகழ்ந்தது? ராஜ்பவனில் ஒரு ‘திருவள்ளுவர்’ தங்கியிருக்கிறார் போலும். அந்த போலித் திருவள்ளுவருக்கு வேண்டுமானால் காவியம் அடித்துக் கொள்ளுங்கள். எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்" என அவர் போட்ட இந்த பதிவு, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியது மட்டுமல்ல, தமிழறிஞர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்திலும் முக்கியமான விவாதத்துக்கு காரணமாகி உள்ளது. மேலும், திருக்குறளின் கண்ணியத்தைக் காக்கும் பொறுப்பு நமக்கே என்பதை வலியுறுத்தும் விதமாக, பலரும் வைரமுத்துவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒருசிலர், இது தமிழ் பண்பாட்டு அடையாளத்தை மாற்றும் முயற்சி எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றொரு புறம், கவர்னரின் நடவடிக்கைகள், தமிழ் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது என தெரிவித்துள்ளனர். திருக்குறள் என்பது வெறும் இலக்கிய நூல் அல்ல, தமிழர் வாழ்வியல் மரபின் நெஞ்சுரம். இந்த நிலையில், அதன் பெயரை வைத்து பொய்க் குறள்கள் பரப்பப்படுவதே மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.
இதையும் படிங்க: என் சாவுக்கு நடிகர் பாலா தான் காரணம்...! வாக்கு மூலத்துடன் வீடியோ வெளியிட்ட மூன்றாவது மனைவி..!