தமிழ் திரைப்பட துறையில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்புத் திறமையால் தனித்த இடத்தை பெற்றுள்ள இவர், அண்மையில் எதிர்பாராத முறையில் ஒரு பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமூக ஊடக தளமான "எக்ஸ்" தளத்தில், ரம்யா மோகன் என்பவர் விஜய் சேதுபதிக்கு எதிராக கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது திரையுலகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ரம்யா மோகன் தனது எக்ஸ் பதிவில், “தனக்குத் தெரிந்த ஒரு பெண் கடந்த பல ஆண்டுகளாக விஜய் சேதுபதியால் பாலியல் இன்பத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளார்” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், “கோலிவுட்டில் நடைபெறும் காஸ்டிங் கவுச்” சம்பவங்களுக்கும், விஜய் சேதுபதிக்கும் தொடர்பு உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, அந்த பெண் தற்போது மறுவாழ்வு மையத்தில் தங்கி இருப்பதாகவும், கடந்த காலத்தில் விஜய் சேதுபதி அவரை கேரவனுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதாகவும், இதற்காக அவர் ரூ.2 லட்சம் வரை பணம் கொடுத்ததாகவும், கூடுதலாக கேரவன் ஓட்டுநர்களுக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கியதாகவும் பதிவில் கூறப்பட்டிருந்தது. இந்த பதிவு சில மணி நேரத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அதே கணக்கில் இருந்த பதிவு விரைவில் நீக்கப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் விளக்கமளித்த ரம்யா மோகன், “அந்த பெண்ணின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பதிவுகளை நீக்கினேன்” என்று தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் பரவிய பின்னர் நடிகர் விஜய் சேதுபதி அதற்கு பதிலளித்தார். அதில் "என்னைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது போலி குற்றச்சாட்டென்று உடனே புரியும். அவர்களே இதைப் பார்த்து சிரிப்பார்கள். எனக்கும் என்னைப் பற்றி நன்கு தெரியும். இவ்வாறு அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. ஆனால் என் குடும்பத்தினர் அதனால் மன உளைச்சலுக்குள்ளாகினர். இதை அப்படியே விட்டுவிடுங்கள்.. மேலும், இந்தப் பெண் சில நிமிட புகழுக்காகவே இவ்வாறு செய்து இருகிறார். அதனால் அவர் மகிழ்ச்சியடைந்தால், அதை அனுபவிக்கட்டும். தற்போதெல்லாம் ஒரே ஒரு சமூக ஊடகக் கணக்கினால் யார் வேண்டுமானாலும், யாரைப் பற்றியும் ஏதாவதொரு குற்றச்சாட்டை கூறி பரப்ப முடியும். இது சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒரு எதிர்மறையான எடுத்துக்காட்டாக இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோபத்தில் என் மனைவியை அடித்து விட்டேன்..! நடிகர் விஜய் சேதுபதி பேச்சால் பரபரப்பு..!
மேலும், தான் நடித்திருக்கும் சமீபத்திய திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இவ்வாறு அவதூறு பரப்பும் முயற்சிகள், திரைப்படத்தின் வெற்றியை பாதிக்க நினைத்திருக்கும் ஒரு சதியாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஆனால், இவ்வாறான அவதூறுகள் தம்மை பாதிக்காது என்றும், தனது ரசிகர்கள் உண்மையை நன்கு புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார் விஜய் சேதுபதி. இதுமட்டுமல்லாமல், விஜய் சேதுபதி தரப்பில் இது குறித்து சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக தவறான மற்றும் அசிங்கமான குற்றச்சாட்டுகளை பரப்புவது இந்திய சட்டப்படி குற்றமாகும் என்பதற்கான சட்ட நடவடிக்கைகளைப் பற்றியும், இவ்வாறு தவறாக புகாரளிக்கும் நபருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையும் இந்த புகாரில் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம், தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் “காஸ்டிங் கவுச்” மற்றும் பாலியல் சுரண்டல் போன்ற தலைப்புகள் மீண்டும் பேசப்படத் தொடங்கியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டு என்பது ஒரு நபரின் வாழ்க்கையையே பாதிக்கக்கூடியது என்பதனால், இது உண்மையா? இல்லையா? என்பதை சாட்சியங்களோடு நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த விவகாரம் குறித்து வெகுவாக விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒரு பக்கம், "பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நியாயம் கிடைக்கவேண்டும்" எனக் கோரிக்கை வருகிறது. மற்றொரு பக்கம், "பிரபலங்களை குறிவைத்து, ஆதாரமில்லாமல் அவதூறு பரப்புவதை நிறுத்தவேண்டும்" என்ற கோணமும் முன்வைக்கப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் சைபர் கிரைம் பிரிவின் கவனத்திற்குள் வருவதால், அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன் விளைவாக, சமூக ஊடகங்களில் எதையும் பகிரும் பொழுது அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது. இப்படி இருக்க என்ன நடந்தது? யார் உண்மை கூறுகிறார்கள்? என்பதைத் தீர்மானிப்பது பின்வரும் நாட்களில் நடைபெறும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளால் மட்டுமே தெரியவரும்..
இதையும் படிங்க: விஜய் சேதுபதி - பூரி ஜெகநாத் கூட்டணியில் தயாராகும் புது படம்..! சீக்ரட்டாக கிறிஸ்துமஸ்-க்கு ரிலீஸ் செய்ய திட்டம்..!