மலையாளத் திரை உலகில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகராக வலம் வந்தவர் தான் விஷ்ணு பிரசாத், இவர் இதுவரை திரைப்படங்கள் மற்றும் சீரியல் தொடர்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நாயகனாக மாறியவர். இவர் தனக்கு புற்று நோய் இருப்பது தெரிந்தும் சினிமா துறையில் பலரது கவனத்தை ஈர்த்தவர்.

குறிப்பாக வெள்ளித்திரையில் 'காசி' என்ற திரைப்படத்தில் அறிமுகமான விஷ்ணு பிரசாத், கை ஏதும் தூரத், ரன்வே, மாம்பழக்காலம், லயன் மற்றும் பென் ஜான்சன் போன்ற மலையாள படங்களில் நடித்தார். அவரது நடிப்பை குறித்து செல்லவேண்டுமானால் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவரது நடிப்பும் மாறும். அவரது நடிப்பு திறமையை பார்த்த பல விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து அவருக்கு மிகுந்த பாராட்டுகள் கிடைத்தது. இதனை விட, விஷ்ணு பிரசாத் மலையாள தொலைக்காட்சி சீரியல்களிலும் பிரபலமான நபராக இருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் மக்களை கவரும் பலதரப்பட்ட வேடங்களில் நடித்தார், இதனால் அவருக்கு என ரசிகர் பட்டாளம் கிடைத்தது.
இதையும் படிங்க: ரெட்ரோவுக்கு கங்குவாவே மேல்.. சூர்யாவை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..!

இப்படி சினிமாவில் தனது முழு அர்ப்பணிப்பை கொடுத்த விஷ்ணு பிரசாத், கடுமையான கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு மோசமான போராட்டங்களை எதிர்கொண்டார், அது சரியாக வேண்டுமானால் உடனே ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூற, அவரது குடும்பத்தினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தயாராகி வந்தனர், அவரது மகள் அவரைக் காப்பாற்ற தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்யத் தயாராக இருந்தார். இருப்பினும், இந்த சிகிச்சைக்கு அதிக பணம் தேவை என்பதால் அவரது உடல் நிலை குறித்து பொதுமக்களுக்குத் தெரியவந்தன. இப்படி உடல் ரீதியாக பல போராட்டங்களையும் வலிகளையும் சுமந்த விஷ்ணு பிரசாத் இன்று காலமானார்.

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த விஷ்ணு பிரசாத், இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை மருத்துவ தரப்பில் இருந்து அதிகார பூர்வ அறிக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “கல்லீரல் செயலிழப்பு காரணமாக பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்தன. சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டும், அவரது நிலை கட்டுப்பாட்டிற்கு வரவில்லை,” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த செய்தியை கேட்டு சினிமா வட்டாரங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படி இருக்க "ஷிவ் கோகுலம்" படத்தில் விஷ்ணு பிரசாத்துடன் இணைந்து நடித்த நடிகை சீமா ஜி நாயர், அவர்கள் இருவரின் நீண்டகால நட்பை நினைவுகூர்ந்து ஒரு குறிப்பை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "விஷ்ணு பிரசாத் விடைபெறுகிறார்... பல வருட பந்தம் முடிவுக்கு வருகிறது. என் மகன் அப்பு ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது எங்கள் நட்பு ரீதியான தொடர்பு தொடங்கியது. கோகுலத்தில் விஷ்ணு என் சகோதரனாக நடிக்க வந்தார், அதுதான் எங்கள் நட்பின் தொடக்கப்பகுதி. நான் சமீபத்தில் மருத்துவமனை சென்று அவரை சந்தித்தேன். அவர் நான் வேதனை பட கூடாது என்பதற்காக நகைச்சுவை மூலம் எனது மனநிலையை எளிதாக்க முயன்றார்.

நான் சில நகைச்சுவைகளைச் சொன்னேன், அவரை ஒரு தனி யானை என்று அழைத்தேன், அவர் சிரித்தார். பின்னர் அவரது மனைவி எனது வருகை அவருக்கு ஆறுதல் அளித்ததாக கூறினார். அவர்களின் மகள் அவரைக் காப்பாற்ற தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்யத் தயாராக இருந்தாள், இப்படி ஒரு நல்ல குடும்பம் நல்ல நண்பர்களிடம் இருந்து அவர் பிரிந்தது மனதிற்கு வேதனையாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரொம்ப வொர்ஸ்ட்..! ஊத்தி மூடிய கரூர் இளையராஜா கச்சேரி..!