கன்னட திரைத்துறையின் மூத்த துணை நடிகரும், கலை இயக்குநருமான தினேஷ் மங்களூரு (Dinesh Mangaluru) உடல்நலக் குறைவால் இன்று காலை 3:30 மணியளவில் உடுப்பி மாவட்டம், குந்தாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 55. கன்னட திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் புகழ்பெற்ற தினேஷ், ‘KGF: Chapter 1’ மற்றும் ‘KGF: Chapter 2’ ஆகிய படங்களில் ‘செட்டி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

தினேஷ் மங்களூரு, மங்களூரில் 1970ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தார். தனது தொழில் வாழ்க்கையை நாடகக் கலைஞராகத் தொடங்கிய இவர், பின்னர் கலை இயக்குநராகவும், நடிகராகவும் திரையுலகில் பயணித்தார். ‘ஆ தினகலு’, ‘உளிடவரு கண்டந்தே’, ‘கிரிக் பார்ட்டி’, ‘ரிக்கி’ உள்ளிட்ட பல படங்களில் துணை வேடங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். கலை இயக்குநராக ‘ரக்ஷஸா’ (2004-05) படத்திற்காக கர்நாடக மாநில விருது பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குனரின் பட வாய்ப்பை மறுத்த பகத் பாசில்.. காரணம் இதுதான்..!!
கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த தினேஷ், ‘காந்தாரா’ படப்பிடிப்பின் போது மூளை குருதி கசிவு ஏற்பட்டு, பெங்களூரில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் மீண்டும் உடல்நலம் மோசமடைந்ததால், குந்தாபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். அவரது மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினேஷ் மங்களூருவின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 8 மணி முதல் பெங்களூரு, லாக்கரேயில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படவுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை மாலை சுமனஹள்ளி இடுகாட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கன்னட திரையுலகின் முக்கிய பங்களிப்பாளராக விளங்கிய தினேஷின் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும். அவரது நினைவுகள், அவரது படைப்புகள் மூலம் என்றும் நிலைத்திருக்கும்.
இதையும் படிங்க: தொடர்ந்து எழுந்த மோசடி புகார்கள்.. காமெடி நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் கைது..!