நாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்திற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு அணிவகுப்பைப் பார்வையிட்டார். திறந்த வெளி ஜீப்பில் காவல்துறையினர் மற்றும் சிறப்பு படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை கம்பீரமாக கண்டு ரசித்தார். இந்நிகழ்வில் நடிகை திரிஷா, முதல்வர் விஜய்யின் தந்தை சந்திரசேகர், அவரது தாய் ஷோபா சந்திரசேகர், தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சென்னை கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கொடியேற்றினார். இதன் பின்னர், கொடி வணக்கம் செலுத்தினார். தமிழ்நாடு முதலமைச்சராக முதன்முறையாக கொடியேற்றிய விஜய், தொடர்ந்து மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார்.
முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையில், நம் தாய்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிற தியாகிகள், தற்போது குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுதாரர்கள், டிஜிபி உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள், முப்படைகளைச் சேர்ந்த அலுவலர்கள், வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், இன்று இந்த சுதந்திர தினத்தில் கோட்டையில் கொடியேற்றுவதைப் பார்க்க வந்திருக்கிற பொதுமக்கள், இந்த சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிற என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள், மாணவ, மாணவிகள் அனைவருக்கும் என்னுடைய சுதந்திர தின நல்வாழ்த்துகளையும், என்னுடைய வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடைய உயிர், உடமை, வாழ்க்கை எல்லாவற்றையும் இழந்து நமக்காக சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அதில் பிரபலமானவர்கள் மற்றும் பேர் தெரியாதவர்கள் என இருந்தாலும், அவர்கள் எல்லோருக்கும், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னுடைய வீர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மை ஒரு அடிமையைப் போல் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாலே மக்கள் மத்தியில் தானாகவே ஒரு ஒற்றுமை வர ஆரம்பிக்கும். எல்லாரும் ஒரே மாதிரி யோசித்து ஒன்றுசேர ஆரம்பிப்பார்கள். அப்படி ஒன்றுசேரும் இடத்தில்தான் சாதி உடையும், மதம் உடையும், மொழி, இனம் என இந்த மாதிரி எல்லாமே உடைந்து நொறுங்கும்.
அப்படி உடைந்து நொறுங்குகிற இடத்தில்தான் கிடைப்பதுதான் உண்மையான சுதந்திரம். அதுதான் நம்ம மகாத்மா காந்திஜி அவர்களின் தலைமையில், 1947-ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 15-ஆம் தேதி நமக்குக் கிடைத்தது.
இன்று நாம் எல்லாரும் அந்த சுதந்திரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்துகொண்டே இருக்கிறோம். அந்த வளர்ச்சியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது நம் எல்லோருடைய கடமையும் கூட.
இந்த நேரத்தில், நம் தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் ஒரு மிகப்பெரிய விடுதலைக்கு சமமான ஒரு விஷயம்தான். அதை நோக்கித்தான் நம்ம அரசும் செயல்பட்டுக் கொண்டு வந்துகொண்டிருக்கிறது.
இந்த 386 ஆண்டு பழமையான கோட்டையில் இங்கு மேலே ஏறி வந்து, இந்த 80-வது சுதந்திர தின நாளில் நம் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இன்று இந்த விழாவில் என்னைப் பேசவும் வைத்திருக்கிறீர்கள். அதற்காக உலகம் முழுவதும் இருக்கிற என்னுடைய தமிழ் சொந்தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்சி இளம்சிங்கப்படைத் தோழர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: #BREAKING முதலமைச்சராக முதல் முறை... கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் விஜய்...!
மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் ஒத்துழைப்புடன் இருக்கிறோம். ஆனால், தமிழ்நாடு நலன் என்று வந்துவிட்டால், மாநில உரிமைக்கு எதிரான முடிவுகளையும் சரி, தமிழ்நாட்டிற்கு எதிரான கொள்கை முடிவுகளையும் சரி தவெக அரசு எப்போதும் எதிர்க்கும்.
மக்களே... ஓட்டு போட்டுவிட்டோம். கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள். இனிமேல் தான் நீங்கள் எங்களுடன் இருக்க வேண்டும். எங்கள் அரசுடன் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் செயல்படுத்த முடியும் என்றார்.
இதையும் படிங்க: சண்டாள பாவிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து... தவெகவை விட்டு விளாசிய திண்டுக்கல் சீனிவாசன்...!