செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறப்படும் சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்யச் சென்றபோது, போலீசாரை கத்தியால் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ரவுடி காலில் குண்டு பாய்ந்து கைது செய்யப்பட்டார்.
திருமுடிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கருப்பு என்கிற தமிழழகு (27) மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் திருமுடிவாக்கம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கும் நோக்கில், தனது நண்பரான ஆகாஷ் என்கிற சூர்யா (24) உடன் குன்றத்தூர் அருகே காவனூர் பகுதியில் உள்ள புதருக்குள் அமர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருமுடிவாக்கம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் சுற்றிவளைத்தனர்.
இதையும் படிங்க: நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! நீட், ராமர் கோவில், பெண்கள் இடஒதுக்கீடு வரை அனல் பறக்கக்போகும் விவாதம்!

போலீசாரைக் கண்டதும் தமிழழகு கையில் இருந்த கத்தியை காட்டி மிரட்டி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவரை சரணடையும்படி போலீசார் எச்சரித்தபோதும், அவர் திடீரென தலைமை காவலர் விஜயகுமாரை கத்தியால் தாக்கியதில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், சம்பவ இடத்தில் இருந்த உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனது துப்பாக்கியால் தமிழழகின் வலது காலைப் குறிவைத்து சுட்டார். குண்டு பாய்ந்ததால் அவர் கீழே விழுந்தார். அப்போது தப்பிச் செல்ல முயன்ற அவரது நண்பர் ஆகாஷையும் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
காயமடைந்த தலைமை காவலர் விஜயகுமார் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த தமிழழகு ஆகியோர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருமுடிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு தயாரித்ததன் நோக்கம், யாரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டனர், இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: திமுக கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டது! சாமானியர்களுக்கு இடமில்லை! கவுன்சிலர் பாபு குற்றச்சாட்டு!