சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இழுபறியாக நீடித்து வரும் நிலையில், இடதுசாரி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (இ.கம்யூ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மா.கம்யூ.) ஆகியவை தி.மு.க. தலைமைக்கு கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
கடந்த 2021 தேர்தலில் வி.சி., இ.கம்யூ., மா.கம்யூ. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வி.சி. 4 தொகுதிகளில் வென்றது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன. இம்முறை மூன்று கட்சிகளும் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்தாலும், கடந்த தேர்தல் தோல்வியை காரணம் காட்டி தி.மு.க. தலைமை தொகுதிகளை குறைக்க முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, கூட்டணியில் புதிதாக இணைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு (தே.மு.தி.க.) முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 தேர்தலுக்குப் பிறகு பெரும் பின்னடைவை சந்தித்து வரும் அக்கட்சிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் பறக்கும் படையினர் தீவிரம்!! தமிழ்நாடு முழுக்க சோதனை! 2 நாளில் ரூ.23 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்!
தற்போது தே.மு.தி.க.வுக்கு 8 தொகுதிகள் வரை ஒதுக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கூட்டணி உறுப்பினர்களிடையே பிரச்னை எழாமல் இருக்க இதை தி.மு.க. தலைமை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்த சூழலில் வி.சி., இ.கம்யூ., மா.கம்யூ. கட்சிகள் தி.மு.க. தலைமைக்கு கடிதம் எழுதியும், நேரடி பேச்சுவார்த்தையிலும் “தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டை முதலில் இறுதி செய்துவிட்டு, பின்னர் எங்களை அழையுங்கள்” என்று தெளிவாகக் கூறியுள்ளன. வி.சி. நிர்வாகிகள் கூறுகையில், “தே.மு.தி.க.வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. எங்களுக்கு பானை சின்னம் இருக்கும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் தருவதை தன்மான பிரச்னையாக பார்க்கிறோம். எனவே தே.மு.தி.க. பங்கீடு முடிந்த பிறகு எங்களிடம் பேசுங்கள்” என்றனர்.
இதேபோல் திருவாரூரில் நேற்று பேட்டியளித்த மா.கம்யூ. மாநில செயலாளர் சண்முகம், “காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதி கொடுப்பதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. 28 இல்லை, 60 தொகுதிகள் கூட கொடுத்தாலும் சரி. ஆனால் காங்கிரஸுக்கு கூடுதல் கொடுக்கும் போது, இடதுசாரிகளுக்கு ஏன் குறைக்க வேண்டும்? இது தான் எங்கள் கேள்வி” என்று ஆவேசமாக தெரிவித்தார்.
தி.மு.க. தலைமை தே.மு.தி.க. பங்கீட்டை முடித்த பிறகு இடதுசாரி கட்சிகளுடன் பேச்சு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போதைய இழுபறி கூட்டணியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: NDA ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் படம் மிஸ்ஸிங்... பாஜகவின் தனி ஆவர்த்தனத்தால் பரபரப்பு...!