நாட்டின் தலைநகர் டெல்லியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டு வந்த இண்டிகோ பயணிகள் விமானத்தில் நடுவானில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, விமானம் உடனடியாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றிப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் சென்னை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணிகளின் தலைக்கு மேலே உள்ள உடைமைகள் வைக்கும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பயணியின் பவர் பேங்க் (Power Bank) கருவியில் திடீரென தீப்பிடித்துப் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் விமானத்திற்குள் இருந்த பயணிகள் பெரும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்து கூச்சலிட்டனர்.

நிலைமையின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த விமானப் பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள், விமானத்தில் இருந்த தீயணைப்பு உபகரணங்களைப் பயன்படுத்தித் தீ மேலும் பரவாமல் சாதுரியமாகத் தடுத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விமானி உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி கோரினார்.
இதையும் படிங்க: 17,000 அடி உயரத்தில் வானில் பறந்தபோது இண்டிகோ விமானத்தை தாக்கிய மின்னல்! சேதமான விமானம்! திக் திக் நிமிடம்!
இதனையடுத்து, விமானம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டு, அங்கு முழு அவசர நிலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் நல்வாய்ப்பாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நடுவானில் பவர் பேங்க் தீப்பிடித்ததால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், தொழில்நுட்பக் குழுவினர் விமானத்தில் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பயணிகளை மாற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்க இண்டிகோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிங்க: இண்டிகோ பயணிகளுக்கு ஷாக்..! விமான டிக்கெட்டில் புதிய கட்டணம்... அதிரடி அறிவிப்பு..!!