இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு ஏர்பஸ் விமான ஒப்பந்த ஊழல் வழக்கில் ரூ.6 கோடி லஞ்சம் கொடுத்ததாக முக்கிய வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011 முதல் 2015 வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக (CEO) பதவி வகித்த கபில சந்திரசேன கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அளித்த வாக்குமூலம்தான் இப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கபில சந்திரசேன, “மஹிந்த ராஜபக்சேவுக்கு மொத்தம் ரூ.6 கோடி லஞ்சம் கொடுத்தேன். இதை தலா ரூ.2 கோடி வீதம் மூன்று தவணைகளில் செலுத்தினேன். அப்போது விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரியங்கர ஜெயரத்னவுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டது” என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிரடி சோதனை... !! - நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்ட முதலமைச்சர் கார்... தேர்தல் பறக்கும் படையினரால் பரபரப்பு...!

ஏர்பஸ் நிறுவனத்துடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக 2017-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மஹிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த ஒப்பந்தத்தில் அவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் பல ஆண்டுகளாக விசாரணை மெத்தனமாக இருந்து வந்தது.
2024-ல் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசு அமைந்த பிறகு, இலங்கையில் கடுமையான புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் இந்த பழைய ஏர்பஸ் வழக்கை மீண்டும் தீவிரமாக எடுத்துக்கொண்டது. இதன் விளைவாகவே கபில சந்திரசேன கைது செய்யப்பட்டு, அவரது வாக்குமூலம் இப்போது வெளியாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்சே இந்த குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை. இலங்கை அரசியலில் ராஜபக்சே குடும்பத்துக்கு எதிரான மிகப் பெரிய சட்டப் போராட்டங்களில் இது ஒன்றாக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்த வழக்கு இலங்கையில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் எந்த அளவுக்கு தீவிரமடைந்துள்ளன என்பதையும் பிரதிபலிக்கிறது.
இதையும் படிங்க: "அப்படி என்ன தான் இருக்கு...” - ஜனநாயகனுக்காக கொந்தளித்த அமீர்... சென்சார் போர்டுக்கு சரமாரி கேள்வி...!