அமெரிக்க ராணுவத்தால் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro), இன்று நியூயார்க் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, “தாம் ஒரு நிரபராதி, அமெரிக்கா தம்மை சட்டவிரோதமாகக் கடத்தி வந்துள்ளது” என வாதிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி, வெனிசுலா தலைநகர் காரகாஸில் உள்ள அதிபர் மாளிகையில் அமெரிக்க சிறப்புப் படைகள் புகுந்து நடத்திய ‘ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ்’ (Operation Absolute Resolve) மூலம் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டனர். அங்கிருந்து ரகசியமாக அமெரிக்காவிற்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட மதுரோ, இன்று பலத்த பாதுகாப்புடன் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். தன் மீதான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்த அவர், “நான் இப்போதும் என் நாட்டின் அதிபர் தான்; நான் ஒரு கண்ணியமான மனிதன்” என்று மொழிபெயர்ப்பாளர் மூலம் தனது வாதத்தை பதிவு செய்தார்.
மெரிக்க நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற இந்த முதல் விசாரணையின் போது, மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ் காயங்களுடன் ஆஜரானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை அழைத்து வரும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவரது நெற்றியில் காயம் ஏற்பட்டுப் பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. மதுரோவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பேசுகையில், “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் அதிபரை மற்றொரு நாடு இப்படி ராணுவத்தைக் கொண்டு கடத்தி வந்து விசாரணை நடத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது; எனவே இந்த வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர். ஆனால், மதுரோவை அதிபராகத் தாங்கள் அங்கீகரிக்கவில்லை எனக் கூறி, அந்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: “வெனிசுலாவின் முதல் பெண் அதிபர்?” நிர்வாகத்தை ஏற்கும் டெல்சி!” ராணுவப் பாதுகாப்புடன் புதிய ஆட்சி நிர்வாகம்!
அமெரிக்க அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரோ தலைமையிலான அரசு, கொலம்பியக் கிளர்ச்சிக் குழுக்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் ஆயிரக்கணக்கான டன் கோகெயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டினர். இதற்காகப் பல மில்லியன் டாலர் லஞ்சமாகப் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தத் திடீர் திருப்பத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவில் துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிக்ஸ் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம், மதுரோவின் ஆதரவாளர்கள் நியூயார்க் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மார்ச் 17-ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “அமெரிக்காவின் அத்துமீறல்... உலக நாடுகள் கொந்தளிப்பு!” - வெனிசுலா தாக்குதலுக்கு சீனா, ரஷ்யா கடும் கண்டனம்!