2020 ஆம் ஆண்டு ஈரானிய ஜெனரல் காசெம் சுலைமானியைக் கொன்ற ட்ரோன் தாக்குதலுக்கும் டிரம்பிற்கும் தொடர்பிருக்கலாம் என்ற தகவல் இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனிடையே, ஈரானின் உச்ச தலைவரின் முன்னாள் மூத்த ஆலோசகர் முகமது-ஜவாத் லாரிஜானி வெளியிட்டுள்ள அறிக்கையும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது புளோரிடா எஸ்டேட்டான மார்-எ-லாகோவில் ஓய்வெடுக்கும்போது தாக்கப்படலாம் என்று கூறியுள்ளார். அங்கு அவர் மல்லாக படுத்து ஜாலியாக சூரிய குளியல் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு குட்டி ட்ரோன் வந்து அவரது தொப்புளில் மோதினால் எப்படியிருக்கும், அதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சிம்பிளான காரியம் எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஃபாக்ஸ் நியூஸுக்கு பேட்டியளித்த டொனால்ட் டிரம்ப்போ சிரித்துக் கொண்டே நான் சூரிய குளியல் எடுத்தது எப்போது என்று தனக்கு நினைவே இல்லை என்றும், ஒரு 7 வயதில் எடுத்திருப்பேன். இப்போதெல்லாம் அதில் ஆர்வம் இல்லை என்றும் நக்கலடித்துள்ளார். மேலும் அதனை தான் ஒரு அச்சுறுத்தலாகவே நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் ராணுவ செலவினங்கள்... ஒப்புதல் அளித்த நேட்டோ தலைவர்கள்... டிரம்ப் தான் காரணமா?
ஈரானின் அணு மற்றும் இராணுவ வசதிகள் மீது அமெரிக்கா சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான 12 நாள் போரின் போது அமெரிக்கா ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது. ஈரான் மீது பொழிந்த சக்திவாய்ந்த குண்டு மழையால், அதன் அணுசக்தி மையங்கள் அழிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். இருப்பினும், சில நிபுணர்கள் சேதம் குறைவாகவே இருப்பதாக நம்புகிறார்கள், மேலும் தாக்குதல்களுக்கு முன்பு ஈரான் அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை வேறு இடத்திற்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாரம், அமெரிக்காவும் ஈரானும் நார்வேயில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. எதிர்காலத்தில் ஈரான் மீதான தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். ஆனால் ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன், டக்கர் கார்ல்சனுக்கு அளித்த பேட்டியில், உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதில் நம்பிக்கை ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று கூறினார். வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நாட்டின் அணுசக்தி செறிவூட்டல் திட்டத்தை நிறுத்தவில்லை என்றால், அமெரிக்கா மற்றொரு தாக்குதலை நடத்தக்கூடும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: ஈரானின் அணுசக்தி தளங்களை துல்லியமாக தாக்கிய அமெரிக்கா.. ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!