டோக்கியோ: ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாட்டின் கிழக்குப் பகுதிகளை புயல் ஒன்று நெருங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘துஜூவான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக கனமழை, பலத்த காற்று மற்றும் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டோக்கியோவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிபா மாகாணத்தின் போசோ தீபகற்பத்தை இந்த புயல் இன்று மாலை முதல் இரவு நேரத்துக்குள் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் தாக்கத்தின் காரணமாக ஜப்பானின் சில பகுதிகளில் கனமழையுடன் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சில நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறிப்பிட்ட பகுதிகளில் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 2 வெள்ளி! ஆசிய விளையாட்டில் இளவேனில் வாலறிவன் அசத்தல்! தலைவர்கள் பாராட்டு!
இதன் தாக்கம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் அய்ச்சி-நகோயா பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், வெளிப்புற விளையாட்டுப் போட்டிகளின் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குதிரையேற்றப் போட்டி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் மழையை எதிர்கொண்டுள்ளனர். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் குடைகளுடன் இந்திய வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆசிய விளையாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில், வானிலை மாற்றம் போட்டிகளின் அட்டவணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புயலின் நகர்வு, மழையின் தீவிரம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றை ஜப்பான் வானிலை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், அடுத்த சில மணி நேரங்களில் போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் வானிலை நிலவரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 2 வெள்ளி! ஆசிய விளையாட்டில் இளவேனில் வாலறிவன் அசத்தல்! தலைவர்கள் பாராட்டு!