நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டின் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகின்றன. உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 180 வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதனிடையே, கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷியா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: போர் நிறுத்தம் வருமா? உக்ரைன் - ரஷ்யா இன்று பேச்சுவார்த்தை.. ஜெலான்ஸ்கி ஆஜர்.. புடின் ஆப்சென்ட்..!
அதேவேளை, 15ம் தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தைக்கு வருமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இந்நிலையில், புதின் அழைப்பை உக்ரைன் ஏற்றது. பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கலந்துகொண்டால், தான் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். மேலும், ரஷ்யா தரப்பில் பங்கேற்கும் குழு அடிப்படையில் அடுத்தகட்ட முடிவு இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

மே 15ம் தேதி வியாழக்கிழமை துருக்கியில் புடினுக்காக நான் காத்திருப்பேன். தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என புடின் அழைப்பை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டார். அதன்படி, துருக்கியின் அங்காராவில் உக்ரைன், ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.
ரஷ்யா தரப்பில் இந்தப் பேச்சுவார்த்தையில் அதிபர் புதினின் ஆலோசகர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான குழு பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், துணை வெளியுறவு அமைச்சர், துணை பாதுகாப்புத் துறை அமைச்சர், ராணுவ தலைமை தளபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுமார் 2 மணிநேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இருநாட்டு கைதிகளை பரிமாறி கொள்வதில் மட்டுமே உடன்பாடு எட்டப்பட்டது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிறகு, போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப், இருநாட்டு தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளார். அதேவேளையில், உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. நேற்று சுமி மாகாணத்தில் பஸ் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய பகுதிகள் மீது ரஷ்யா மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிவ், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகிய பகுதிகளில் 273 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 4 வயது குழந்தை உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
உக்ரைனுடனான போர் தொடங்கியது முதல் மிகப்பெரிய டிரோன் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. போரின் 3வது ஆண்டான கடந்த பிப்.,23ம் தேதி, உக்ரைன் மீது 267 டிரோன்களில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது, அதை விட கூடுதலான டிரோன்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உக்ரைன் ராணுவம் கூறுகையில்,'உக்ரைனின் கிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ராணுவம் தக்க பதிலடியை கொடுத்து ள்ளது. 88 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது. எஞ்சிய டிரோன்கள் திரும்ப சென்று விட்டன,' என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இப்ப புரியுதா..! இந்தியாவுக்கு ரஷ்யா- பாகிஸ்தானுக்கு சீனா..!