இந்திய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் ஆயுதப் படைகளுக்கு தாங்கள் விரும்பும் நேரம், இடம் மற்றும் முறையில் பதிலடி கொடுக்க முறையாக அதிகாரம் அளிப்பதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அனைத்து சேவைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் நிலைமை குறித்து விவாதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத இலக்குகள் மீது இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51 இன் படி, இந்தியத் தாக்குதல்களில் அப்பாவி பாகிஸ்தானியர்களின் உயிரிழப்புக்குப் பழிவாங்க, தற்காப்புக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், இடத்தில், முறையில் பதிலளிக்கும் உரிமை பாகிஸ்தானுக்கு உள்ளது'' என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்தது.
இதையும் படிங்க: என் குடும்பமே போச்சு.. நானும் போயிருக்கனும்; கதறும் மசூத் அசார்!!
ஷெரீப் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, நாடாளுமன்றத்தில் தனது உரையின் மூலம் நாட்டு மக்களுடன் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளார். இந்தியாவின் தூண்டுதலற்ற, சட்டவிரோத போர் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல்களை தேசிய பாதுகாப்பு கவுன்சில் விவாதித்தது. சர்வதேச சட்டத்தின் கீழ் வெளிப்படையாகவே போர்ச் செயல்களாகக் கருதப்படும் பாகிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறல்களை தேசிய பாதுகாப்பு கவுன்சில் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பது மனித நடத்தையின் அனைத்து விதிமுறைகளையும் சர்வதேச சட்டத்தின் விதிகளையும் மீறும் ஒரு கொடூரமான, வெட்கக்கேடான குற்றமாகும்" என்று அது கூறியது.
இந்தியாவின் தூண்டுதலற்ற சட்டவிரோத நடவடிக்கைகளின் தீவிரத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து, சர்வதேச விதிமுறைகள், சட்டங்களை வெளிப்படையாக மீறியதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்தது.
அந்த அறிக்கையில் மேலும், "இந்திய தாக்குதல் வேண்டுமென்றே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து, கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக பொய்யான சாக்குப்போக்கில் நடத்தியது. இதன் விளைவாக அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். மசூதிகள் உட்பட பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு சேதம் விளைவித்தனர்" என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் முடிந்ததும், முன்னேற்றங்கள் குறித்து மேலும் விவாதிக்க ஷெரீப் பிற்பகல் 3:30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், நாடாளுமன்றத்தில் தனது உரையின் மூலம் தற்போதைய பதற்றம் தொடர்பான முடிவுகளை அவர் நாட்டுடன் பகிர்ந்து கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பஞ்சாப் மாகாணம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நகரங்களில் நள்ளிரவுக்குப் பிறகு இந்திய தாக்குதல்கள் நடத்தியதில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் கூறியது.
ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது.

பாகிஸ்தான் தனது பிரதேசத்தில் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாகக் கூறும் இந்திய குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரித்ததாகவும், ஏப்ரல் 22 தாக்குதல்களில் நம்பகமான, வெளிப்படையான, நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் ஒரு உண்மையான வாய்ப்பை வழங்கியது. துரதிர்ஷ்டவசமாக அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அப்பாவி மக்களைத் தாக்குவது பாகிஸ்தானால் சகிக்க முடியாதது அல்லது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியா, அனைத்து நல்லறிவு, பகுத்தறிவுக்கும் எதிராக, மீண்டும் ஒரு முறை இப்பகுதியில் ஒரு தீயை மூட்டிவிட்டது. அதன் விளைவுகளுக்கு இந்தியாவே பொறுப்பு'' என்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவால் டென்ஷன்..! 'பைல்ஸ்- உடன் மருத்துவமனையில் படுத்த பாக்., பிரதமர்..!