பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல், அப்பட்டமான போர் செயல், இதற்கு நாங்களும் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி தரும் வகையில் கடந்த இரு வாரங்களாக மத்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுத்தது. இந்நிலையில் முப்படைகளும் எந்த நடவடிக்கையும் எடுக்க முழுசுதந்திரத்தையும் அளித்ததைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை ராணுவம் எடுத்தது.
இதையும் படிங்க: சுக்கு நூறாக்கப்பட்ட பாகிஸ்தான் பங்கர்கள்..! அலறும் தீவிரவாதிகள்..!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதி அமைப்புகள், அவற்றின் தலைமை அலுவலகம், பயிற்சிக் கூடம், முகாம்கள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து 9 இடங்களில் இந்திய ராணுவம் ட்ரோன்கள், விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், தீவிரவாதிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவின் நடவடிக்கை அப்பட்டமான போர் செயல், இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் மிரட்டியுள்ளது. பாகிஸ்தாந் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷ்ஹாக் தார் வெளியிட்ட அறிக்கையில் “ இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது நள்ளிரவில் நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் என்பது அப்பட்டமான போர் செயல். பாகிஸ்தானின் இறையாண்மை மீறி ஆயுதங்களால் தாக்கியுள்ளது, சர்வதேச எல்லையைக் கடந்து அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் இதற்கு தகுந்த பதிலடி சரியான நேரத்தில் கொடுக்கும். ஐ.நா.வின் 51 பிரிவின் கீழ் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும். இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தானில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரமதர் ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “இந்தியாவின் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது, தகுந்த பதிலடி கொடுப்போம். எதிரி தனது தீய நோக்கங்களில் வெற்றிபெற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேசிய பாதுகாப்புக் குழுக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் இந்தியாவின் தாக்குதல், அதற்கான பதிலடி குறித்து பேசப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: "ஆபரேஷன் சிந்தூர்": ரவுண்ட் கட்டிய இந்தியா.. சுக்குநூறான 9 இடங்கள்.. திணறும் பாக்.,!