பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினிடாட் அண்ட் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதன்பின் நேற்று அர்ஜென்டினா சென்றார் பிரதமர் மோடி. அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அவருடைய வருகையை முன்னிட்டு, இந்திய சமூகத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்நாட்டு அதிபர் ஜேவியர் மிலேயுடன் எரிசக்தி, கனிமத் துறை மற்றும் மருந்துத் துறைகளில் இருநாடுகளும் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பிரதமர் விவாதித்தார்.
இதையும் படிங்க: அர்ஜென்டினாவை அதிரச் செய்த பாரத் மாதா கி ஜெய் கோஷம்.. பிரதமர் மோடியின் மாஸ் என்ட்ரி..!
அர்ஜெண்டினா பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் அங்கிருந்து பிரேசிலுக்கு புறப்பட்டுச் சென்றார்.
காலியோ சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், ஆபரேஷன் சிந்தூரின் கருப்பொருளை மையமாக வைத்து, பிரேசில் வாழும் இந்தியர்கள் கலாசார நடன நிகழ்ச்சியும் நடத்தினர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "ரியோ டி ஜெனிரோவில் பிரேசிலின் இந்திய சமூகத்தினர் மிகவும் துடிப்பான வரவேற்பை அளித்தனர். அவர்கள் இந்திய கலாச்சாரத்துடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள் என்பதும், இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 2 நாட்கள் நடைபெறும் பிரிக்ஸ் மாநாடு இன்று தொடங்கும் நிலையில், இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட ஒரு செய்தியில், பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரை சென்றடைந்துள்ளேன். இதன்பின், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின்பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தில், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் மற்றும் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரேசிலில், ஜூலை 6, 7 தேதிகளில் நடைபெறும் 17-ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காமில் நடத்திய தாக்குதல் குறித்தும், அதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் எடுத்துக் கூறுவார் என்றும் தெரிகிறது. சமீபத்தில் பிரேசிலில் 'பிரிக்ஸ்' அமைப்பு நாடுகளின் பார்லி குழு கூட்டம் நடந்தது.
இதில் சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான இந்தியக்குழு பங்கேற்றது. அப்போது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: டிரினிடாட் பிரதமர் கொடுத்த மறக்க முடியாத சர்ப்ரைஸ்.. அசந்து நின்ற மோடி.. பீகாரின் மகள் என கவுரவம்..