இஸ்லாமாபாத்: அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான Powerus, பாகிஸ்தான் ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதுடன், ஆரம்பகட்ட ட்ரோன் ஆர்டரையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகன்களான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோருக்கு முதலீட்டு தொடர்பு இருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
Powerus நிறுவனத்தின் பிரதிநிதிகள், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஃபீல்டு மார்ஷல் அசிம் முனிரை ராவல்பிண்டியில் சந்தித்தனர். அப்போது பாதுகாப்பு கொள்முதல், உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து Powerus நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரெட் வெலிகோவிச், பாகிஸ்தான் ராணுவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதையும், அதன் அடிப்படையில் ஆரம்பகட்ட ஆர்டர் கிடைத்திருப்பதையும் Reuters செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக 2 தாக்குதல்கள்! பலுசிஸ்தானில் வெடித்த வன்முறை! 25 ராணுவ வீரர்கள் பலி?
ஆர்டர் எத்தனை ட்ரோன்களுக்கு என்பது மற்றும் அதன் மொத்த மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களாலும் ரகசிய ஒப்பந்த விதிமுறைகளாலும் இந்த தகவல்களை வெளியிட முடியாது என நிறுவன தரப்பு தெரிவித்துள்ளது.

Powerus நிறுவனம் ராணுவம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கான வான்வழி மற்றும் கடல்வழி ட்ரோன் தொழில்நுட்பங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், பாகிஸ்தானிலேயே ட்ரோன் தொழில்நுட்பத்தை உருவாக்குவது அல்லது உற்பத்தி செய்வது தொடர்பான வாய்ப்புகளையும் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, Powerus நிறுவனம் Aureus Greenway Holdings என்ற அமெரிக்க பங்குச்சந்தை நிறுவனத்துடன் இணையும் நடவடிக்கையில் உள்ளது. அந்த நிறுவனத்தில் டிரம்பின் மகன்களான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப் ஆகியோருக்கு American Ventures முதலீட்டு நிறுவனம் மூலம் பங்கு இருப்பதாக அமெரிக்க ஒழுங்குமுறை ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முதலீட்டு தொடர்பு குறித்து எழுந்த கேள்விகளுக்கு பதிலளித்த Powerus தலைமை நிர்வாக அதிகாரி ஆண்ட்ரூ ஃபாக்ஸ், ஒப்பந்தங்கள் வணிகத் தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும், டிரம்ப் மகன்களுக்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் அல்லது ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் பங்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தரப்பும் தாம் செயல்பாட்டு நிர்வாகத்தில் ஈடுபடாத முதலீட்டாளர் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!