வருவாய் ஆய்வாளர் கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரசாரகர், மாநிலத் தலைவர், தேசிய செயலாளர், ராஜ்ய பா உறுப்பினர் என பல பதவிகளை வகித்து வந்த இல. கணேசன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இந்த துயரம் செய்தியைக் கேட்டு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இல.கணேசன், சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது கொண்ட தீராத பற்றின் காரணமாக, திருமணமே செய்து கொள்ளாமல் 1970 ஆம் ஆண்டு வருவாய் ஆய்வாளர் பணியை உதறிவிட்டு முழுநேரச் செயல்பாட்டாளராகப் பொதுவாழ்விற்கு வந்தார்.
இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் ஒரு கவிஞராக இல.கணேசன் எழுதிய பாடல்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் எதிரொலித்ததாக பா.ஜ.கவினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING உயிர் பிரிந்தது... நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்...!
1991ம் ஆண்டு பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். பா.ஜ.கவில் ஆளுமையுள்ள தலைவராக இருந்தாலும் தேர்தல் அரசியலில் எந்த வெற்றியையும் இல.கணேசன் பெற்றதில்லை. 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
இல.கணேசன் தமிழக பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகே தமிழ்நாட்டில் கட்சி சற்று பிரபலமடைந்தது. தமிழக பாஜகவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு யாருமே இல்லை என்ற நிலையை மாற்றி, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, ஹெச்.ராஜா, டாக்டர் மைத்ரேயன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் என பலரையும் தலைவர்களாக மாற்றினார்.
ஆகஸ்டு 22, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அவர்களால் 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
பிப்ரவரி 20, 2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: #BREAKING உயிர் பிரிந்தது... நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானார்...!