பாகிஸ்தானில் அதிக நிலப்பரப்பு கொண்ட மாநிலமாக இருப்பது பலுசிஸ்தான். பலுாச் இன மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இங்கு போராளிக்குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதில் பலுச் விடுதலை ராணுவம் என்ற போராளிக்குழு முக்கியமானது. ராணுவம் போன்ற அனைத்து வசதிகளுடன் செயல்படும் இந்த அமைப்பு, பாகிஸ்தான் ராணுவம் மீதும், அரசு அமைப்புகள், நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.

சமீபத்தில் இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள் ரயிலை கடத்தி போலீசார், ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் அரங்கேறியது. இப்போது இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் கவனம் செலுத்தி வரும் சூழலில், பலுச் விடுதலை ராணுவம் மீண்டும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த போராளிகள், கலாட் மாவட்டத்தில் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர். வங்கிகள், கோர்ட் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பாக்., தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. காஷ்மீர் கவர்னர் சொன்ன குட்நியூஸ்..!

குவெட்டா பகுதியில் அமைந்துள்ள கடானி சிறையை தாக்கிய பலுச் விடுதலை ராணுவத்தினர் அங்கிருந்த 10 போராளிகளை விடுவித்தனர். போலீசார் 5 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இந்த தாக்குதல்களில் 14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாஸி பேட்டி ஒன்றில் கூறி உள்ளதாவது; பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருந்து பெருமளவில் பலுசிஸ்தான் நழுவி விட்டது.
அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர் இல்லாமல் இரவில் வெளியே செல்ல முடியாது. பலுசிஸ்தானில் ஒரு சில கிளர்ச்சியாளர்கள் மட்டுமே இருப்பதாக ராணுவ தளபதி அசிம் முனீர் தவறாக கருதிக் கொண்டு இருக்கிறார் என கூறி உள்ளார். இந்தியா நடத்திய தாக்குதல்களால் பாகிஸ்தான் தத்தளித்து வரும் சூழலில் உள்நாட்டு சிக்கலையும் சமாளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் குஸ்தார் மாவட்டத்தில் ராணுவத்துக்கு சொந்தமான பள்ளி பஸ்சினை குறிவைத்து, காரில் ஐ.இ.டி. குண்டுகளுடன் சென்ற ஒரு தற்கொலை படை மோதியது. இன்று காலை பள்ளி செல்லும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற குழந்தைகள் 38 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை குவெட்டா என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு சென்றனர்.
காயம் அடைந்தவர்கள் நிலைமை கவலை அளிப்பதாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத கும்பலும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் பலூசிஸ்தான் விடுதலைப் படை இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த அமைப்பை அமெரிக்கா 2019ல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.இந்த தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடுமையாக கண்டித்துள்ளார். இந்திய ஆதரவுடன் இயங்கும் பலூசிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தான் ராணுவமும் இதே போன்று தெரிவித்திருக்கிறது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதையும் அது தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானின் இந்த கருத்துக்கு இந்தியா இதுவரை பதில் ஏதும் சொல்லவில்லை. பாகிஸ்தானின் பெஷாவர் நகரத்தில் 2014ல் இதே போன்று, குழந்தைகளை ஏற்றிச் சென்ற ராணுவ பள்ளி வாகனம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. தாலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் 130க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு இப்படியொரு கொடும் சம்பவம் நடந்திருக்கிறது.
இதையும் படிங்க: பர்சனல் டைரியில் பாக்., குறிப்புகள்.! உளவாளி ஜோதி மல்ஹோத்ராவின் ரகசிய நெட்வொர்க்..!