அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாட்டின் ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக சிறப்பு ஈவுத்தொகை அறிவித்துள்ளார். சுமார் 14.5 லட்சம் (1.45 மில்லியன்) ராணுவ வீரர்களுக்கு தலா 1,776 டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதனை 'வாரியர் டிவிடெண்ட்' (போர்வீரர் ஈவுத்தொகை) என்று அழைத்துள்ள டிரம்ப், வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் இந்த ஈவு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
டிசம்பர் 17ஆம் தேதி இரவு வெள்ளை மாளிகையின் டிப்ளமாடிக் ரிசெப்ஷன் ரூமிலிருந்து தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய பிரைம் டைம் உரையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் டிரம்ப். அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 1776ஆம் ஆண்டைக் கௌரவிக்கும் விதமாக இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"செக்குகள் ஏற்கெனவே அனுப்பும் பணியில் உள்ளன" என்று அவர் கூறினார். இந்த ஈவுத்தொகை வரி வருவாய், குறிப்பாக வெளிநாடுகளுக்கு விதிக்கப்பட்ட டாரிஃப்கள் (இறக்குமதி வரி) மூலம் நிதியளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி சரவெடி தான்… ஈரோட்டில் இன்று மக்கள் சந்திப்பு… கோவை ஏர்போர்ட்டுக்கு புறப்பட்ட விஜய்…!
தனது 20 நிமிட உரையில், டிரம்ப் தனது நிர்வாகத்தின் சாதனைகளை விரிவாக பட்டியலிட்டார். எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தியது, சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலும் தடுத்தது, பல சர்வதேச போர்களை முடிவுக்கு கொண்டுவந்தது, ஈரானின் அணு அச்சுறுத்தையை அழித்தது, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தியது உள்ளிட்டவற்றை அவர் குறிப்பிட்டார்.

மேலும், அமெரிக்காவில் 18 டிரில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும், இது வேலைவாய்ப்புகள், ஊதிய உயர்வு, தொழிற்சாலைகள் திறப்பு ஆகியவற்றை உருவாக்கும் என்றும் கூறினார்.
ராணுவ வீரர்களுக்கு இந்த ஈவு "யாரையும் விட அவர்களே இதற்கு தகுதியானவர்கள்" என்று டிரம்ப் வலியுறுத்தினார். இந்த அறிவிப்பு ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேநேரம், பொருளாதார நிபுணர்கள் இதன் நிதி ஆதாரம் மற்றும் நீண்டகால தாக்கம் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் சமீபத்தில் நிறைவேற்றிய 2026ஆம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டம் (NDAA) ராணுவ வீரர்களுக்கு 4 சதவீத ஊதிய உயர்வு மற்றும் வீட்டுவசதி, குழந்தை பராமரிப்பு உதவிகளை வழங்கியுள்ள நிலையில், இந்த போனஸ் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை டிரம்பின் ராணுவ ஆதரவு கொள்கையின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ராணுவ வீரர்களின் ஆதரவு டிரம்புக்கு எப்போதும் வலுவான அடித்தளமாக உள்ளது.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால்?!! உக்ரைனுக்கு அதிபர் புடின் வார்னிங்!