வாஷிங்டன்: “விரைவில் பாரிஸ் நகரம் முஸ்லிம் நகரமாக மாறிவிடும்” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. பிரான்சில் வெடித்துள்ள போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களுக்கு அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரான்சில் தீவிரமடைந்த போராட்டங்கள்
பிரான்சில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற போராட்டங்கள் பல்வேறு நகரங்களில் வன்முறையாக மாறின. கடைகள் சூறையாடப்பட்டதுடன், பொது சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. போராட்டங்களின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
இதையும் படிங்க: டிரம்ப் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யா மீது தாக்குதல்? ஜெலன்ஸ்கியை சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 1,000 பாதுகாப்புப் படையினர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டங்களைக் கட்டுப்படுத்த பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும், குறிப்பிட்ட இடங்களில் ஊரடங்கு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேக்ரானை விமர்சித்த டிரம்ப்
இந்தச் சூழலில், பிரான்சில் நிலவும் வன்முறைக்கு குடியேற்றக் கொள்கைகளே காரணம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். மேக்ரானிடம் ஏற்கெனவே எல்லைகளைக் கட்டுப்படுத்துமாறு எச்சரித்ததாகவும், அதை அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், பிரான்சில் நடைபெறும் சம்பவங்களுக்கு கல்வி உள்ளிட்ட பிற பிரச்சினைகள் காரணமல்ல என்றும், கட்டுப்பாடற்ற குடியேற்றமே முக்கியக் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, “பாரிஸ் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறிவிடும்” என்ற கருத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
ராஜினாமாவை நிராகரித்த மேக்ரான்
இதற்கிடையே, வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தார். ஆனால், தற்போதைய நெருக்கடியான சூழலில் பாதுகாப்புப் படைகளின் செயல்பாடுகள் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு, அவரது ராஜினாமாவை அதிபர் மேக்ரான் நிராகரித்தார்.
வன்முறையை முன்கூட்டியே கணிப்பதிலும் உளவுத் தகவல்களைப் பயன்படுத்துவதிலும் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யவும் மேக்ரான் உத்தரவிட்டுள்ளார்.
பிரான்சில் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் தொடரும் நிலையில், குடியேற்றக் கொள்கைகள் தொடர்பான டிரம்பின் கருத்துகள் சர்வதேச அரசியல் விவாதத்தையும் தீவிரப்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: போரை முடிக்க விருப்பமில்லை! ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப்! ஜெலன்ஸ்கி மீது பகிரங்க குற்றச்சாட்டு!