வாஷிங்டன்: உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், அமெரிக்கா ரகசிய ராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு 10 கோடிக்கும் மேற்பட்ட பீப்பாய் கச்சா எண்ணெயை திறந்த சந்தைக்கு கொண்டு சென்றதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருந்தது. இதனால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்வு ஏற்பட்ட நிலையில் அமெரிக்கா ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “கடந்த மாதம் ராணுவத்துக்கு உத்தரவிட்டேன். ‘புராஜெக்ட் பிரீடம்’ என்ற பெயரில் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ரகசிய பணியைச் செய்யுங்கள்” என்றார்.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடும் தாக்குதல்! இந்திய மாலுமிகள் 3 பேர் பலி!! ஓமனில் பயங்கரம்!

“இந்த ரகசிய நடவடிக்கையால் ஒவ்வொரு இரவும் 200 கப்பல்கள் மூலம் லட்சக்கணக்கான பீப்பாய் எண்ணெயை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எடுத்து வந்தோம். மொத்தம் 10 கோடிக்கும் மேற்பட்ட பீப்பாய் எண்ணெயை திறந்த சந்தைக்கு கொண்டு சென்றுள்ளோம். ஈரான் இதை அறியவே இல்லை. அவர்களுக்கு சரியான ரேடார் இல்லாததால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை” என டிரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
முன்பு அறிவிக்கப்பட்ட ‘புராஜெக்ட் பிரீடம்’ ஒரு நாளுக்குள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உண்மையில் ரகசியமாக நடவடிக்கை தொடர்ந்திருப்பது இப்போது வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை உலக பொருளாதாரத்துக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக அமெரிக்க தரப்பு கூறுகிறது.
எனினும், இந்த வெளிப்பாடு சர்வதேச அரங்கில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தரப்பில் இன்னும் எந்த உத்தியோகபூர்வ பதிலும் வரவில்லை. உலக நாடுகள் பலவும் இந்த ரகசிய நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய பகுதி என்பதால், இந்த ரகசிய நடவடிக்கை எண்ணெய் விலையில் ஏற்பட்ட அழுத்தத்தை ஓரளவு குறைக்க உதவியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி இனி அனைவருக்கும் திறந்தே இருக்கும்! அமெரிக்கா அதனை கண்காணிக்கும்! அதிபர் ட்ரம்ப் உறுதி!