பட்டாசு மூலப்பொருள் இயந்திரக் கலவை சோதனையில் வெடி விபத்து- பட்டாசுத் தொழிற்சாலை மேற்பார்வையாளர், இயந்திரப் பொறியாளர் இருவரும் உடல் சிதறி பலி. உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு.
சிவகாசி அருகே நமஸ்கரித்தான் பட்டியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அனைத்து ரகப் பட்டாசு வகைகளும் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை அலசி, கலவை செய்வதற்கான இயந்திரம் வெளிமாநிலத்தி லிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. அந்த இயந்திரத்தின் சோதனை ஓட்ட முயற்சியில் பட்டாசு தொழிற்சாலை மேற்பார்வையாளர் பாலமுருகன் ( வயது 45) மற்றும் இயந்திர பொறியாளர் திருநெல்வேலி பேட்டைதெரு அகமத் இப்ராஹிம்( வயது 50 ) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென மூலப் பொருள்களில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நடந்தது. விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே மேற்பார்வையாளர் பாலமுருகன் உயிரிழந்தார். முதலுதவி சிகிச்சை பெற்ற அகமது இப்ராஹிம் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: பெண் காவலருக்கே இப்படியொரு நிலையா?... அலறிய வேலூர்...சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே?
தகவலறிந்த தீயணைப்பு, வருவாய் மற்றும் தொழிலக பாதுகாப்பு போன்ற பல்வேறு அரசுத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் இயந்திரம் மூலமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட அறையின் மேல் கூரை சேதமடைந்தது.
பட்டாசுத் தொழிற்சாலை விபத்து பற்றிய புகாரின் பேரில் திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் தொழிற்சாலையின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, மேலாளர்(போர்மேன்) வீரமணி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான இருவரையும் வலைவீசித் தேடி வருவதுடன், மேல்விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்நியூஸ்... சொத்து வரி வசூலிப்பு நிறுத்திவைப்பு... மக்கள் எதிர்ப்புக்கு பணிந்த தவெக...!