கிழக்கு ரஷ்யாவின் கம்சட்காவில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது , இதனால் 4 மீட்டர் (13 அடி) உயரம் வரை சுனாமி ஏற்பட்டது. அந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஜப்பானில் உள்ள பல பசிபிக் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை சுனாமி கண்காணிப்பில் உள்ளது.
கம்சட்காவின் அவசரகால அமைச்சர் செர்ஜி லெபடேவ், பல இடங்களில் 3-4 மீட்டர் அதாவது, 10 முதல் 13 அடி உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததாக அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளார். இதனையடுத்து கடற்பகுதியில் இருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், அமெரிக்கா ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. குவாம் மற்றும் மைக்ரோனேஷியா தீவுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடற்கரையிலிருந்து மக்கள் விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையில், கலிபோர்னியா, வாஷிங்டன், ஓரிகான் மற்றும் அலாஸ்காவில் உள்ள அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் சுனாமி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: ரஷ்யா, ஜப்பானை தாக்கியது சுனாமி.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.. அவசர, அவசரமாக வெளியேற்றம்..!
ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரப் பகுதியான ஹொக்கைடோவிலிருந்து வகயாமா வரை நீண்டுள்ள கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மியாகி மாகாணத்தில் உள்ள இஷினோமகி துறைமுகத்தில் 50 சென்டிமீட்டர் சுனாமி ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் டோகாச்சி துறைமுகத்தில் 40 சென்டிமீட்டர் உயர அலைகள் தாக்கியுள்ளன. கூடுதலாக, ஹொக்கைடோவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள எரிமோ நகரில் 30 சென்டிமீட்டர் அலைகள் தாக்கின.
ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கியதை அடுத்து இந்தியர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை குறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதியான ஹவாயில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தலை வழங்கி இருக்கிறது.
அமெரிக்க அவசர நிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தை இந்தியர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்ணும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்...!