ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான போரைத் தொடங்கியதற்கு இன்று (பிப்ரவரி 24) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த நீண்டகால போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடுகள், உடமைகளை இழந்து அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் பெரும் சேதமடைந்துள்ளன.
தற்போது உக்ரைனின் சுமார் 19-20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. கிழக்கு பகுதிகளான டான்பாஸ், கிரிமியா உள்ளிட்ட இடங்கள் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும், நிரந்தர தீர்வு இன்னும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: 4வது ஆண்டில் உக்ரைன் - ரஷ்யா போர்! முரண்டு பிடிக்கும் தலைவர்கள்! பலனளிக்குமா 3ம் கட்ட அமைதி பேச்சு வார்த்தை!

அவர் கூறியதாவது: "உக்ரைனை ஆதரிப்பதில் அமெரிக்கா மிக சக்திவாய்ந்த நாடு. அதிலிருந்து பின்வாங்க முடியாது. அதிபர் டிரம்ப் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவை தொடர்ந்து உறுதிப்படுத்துவார் என்று நம்புகிறேன். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஆனால் ரஷ்யாவின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க முடியாது. போருக்கு புடின் ஒருவரே முக்கிய காரணம்."
ஜெலன்ஸ்கி மக்கள் சோர்வடைந்துள்ளதை ஒப்புக்கொண்டாலும், சரணடைவது நாட்டை இழப்பதற்கு சமம் என்று தெரிவித்தார். ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், உக்ரைனின் இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அமெரிக்காவின் அழுத்தம் இருந்தாலும், ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என்று அவர் உறுதியளித்தார்.
இந்தப் போர் உலக அரசியலை பெரிதும் பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ உள்ளிட்டவை உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. சமீபத்தில் ஜெனிவா, ஆலாஸ்கா உள்ளிட்ட இடங்களில் பேச்சுகள் நடைபெற்றன. இருப்பினும், பிரதேச விட்டுக்கொடுப்பு, நேட்டோ உறுப்பினராகும் உரிமை போன்ற விஷயங்களில் இரு தரப்பும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளன.
இந்த நான்காண்டு போரில் உக்ரைன் வீரர்களின் தியாகம், மக்களின் துன்பங்கள் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தாலும், நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது. ஐந்தாவது ஆண்டு தொடங்கியுள்ள இன்று, உலகம் அமைதிக்கான வழியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இதையும் படிங்க: அணு ஆயுதக் குறைப்பு விவகாரம்..!! மிரட்டும் டிரம்ப்.. அஞ்சாத ஈரான்..!! மீண்டும் பேச்சுவார்த்தை..!!