நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இந்தப் போரில் ரஷியாவை எதிர்த்துப் போரிடுவதற்காக உக்ரைனுக்கு அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் ஆயுத, தளவாடங்களை அனுப்பி உதவின.
முன்னாள் அதிபர் பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு பல ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களையும், ராணுவ உதவியையும் வழங்கியது. இதுவரை 6,600 கோடி டாலர் (சுமார் ரூ.5.65 லட்சம் கோடி) மதிப்பிலான ஆயுதங்களை அனுப்புவதாக பைடன் அரசு உறுதியளித்திருந்தது.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் லட்ச ரூபாய் சன்மானம்.. மதர் ஹீரோயின் விருது.. ரஷ்யாவில் பகீர்..
ஆனால் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து இந்த ஆயுத சப்ளை குறித்து, அரசு நிர்வாகத்தில் சிலர் கருத்து தெரிவிக்க தொடங்கினர். மேலும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளுக்கு அமெரிக்கா அளிக்கும் ராணுவ ஆதரவு மற்றும் உதவியை பாதுகாப்புத்துறை ஆராய்ந்தது. அப்போது தங்கள் சொந்த ராணுவ தலைமையகமான பென்டகனிலேயே சில குறிப்பிட்ட ஆயுதங்களின் இருப்பு குறைவாக இருப்பதை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து உக்ரைனுக்கு அனுப்பி வந்த சில குறிப்பிட்ட ஆயுதங்களை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் தெரிவித்து இருந்தது. அண்மையில்தான், உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க இருந்த நேரத்தில், அமெரிக்கா ஆயுத சப்ளையை நிறுத்துவதாகக் கூறியிருப்பது உக்ரைனுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் அன்னா கெலி கூறியதாவது: உக்ரைனுக்கு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டு, இன்னும் அனுப்பப்படாமல் இருக்கும் சில ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. பிற நாடுகளுக்கான ராணுவ உதவிகள் குறித்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் மறுஆய்வு மேற்கொண்டது.
அந்த ஆய்வில், உக்ரைனுக்கு அளிப்பதாக இருந்த சில ஆயுதங்களின் இருப்பு அமெரிக்காவிடம் மிகவும் குறைவாக இருப்பதாகத் தெரியவந்தது. அதையடுத்து, அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ரஷியாவுடன் தொடா்ந்து போரிடுவதால் இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்க முடியாது என்றும் தேவையற்ற உயிரிழப்புகள்தான் ஏற்படும் என்றும் டிரம்ப் அரசின் முக்கிய அதிகாரிகள் அப்போது கூறினர். மேலும், தற்போது ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்காமலேயே அந்த நாட்டுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உக்ரைனை டிரம்ப் அரசு நிா்பந்தித்துவருவதாகக் கூறப்படுகிறது. உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஏற்கெனவே ராணுவ உளவுத் தகவல் பரிமாற்றம் நிறுத்திவைப்பு போன்ற அறிவிப்புகளை டிரம்ப் அரசு வெளியிட்டுவந்தது.
இந்தச் சூழலில், தற்போது உக்ரைனுக்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்க உள்ளதாக அறிவித்து ட்ரம்ப் பரபரப்பை கிளப்பி உள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: அமெரிக்காவை எதிர்த்தா எனக்கு தோஸ்த்து! தலிபான்களை அங்கீகரித்த ரஷ்யா! சர்வதேச அரசியலில் திடீர் ட்விஸ்ட்..!