புது டெல்லி: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அபாரமான சாதனைகளுக்காக மத்திய அரசின் உயரிய விருதான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 26) நேரில் வழங்கினார். இளம் வீரர்களின் சிறந்த திறமைக்காக வழங்கப்படும் இந்த உயரிய குடிமகன் விருது, வைபவுக்கு விளையாட்டுத் துறையில் அவரது பங்களிப்புக்காக அளிக்கப்பட்டது.
வைபவ் சூர்யவன்ஷியின் கிரிக்கெட் பயணம் 4 வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை அவரது ஆர்வத்தை கண்டறிந்து, 9 வயதில் சமஸ்திபூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் சேர்த்தார். இளம் வயதிலேயே பல சாதனைகளை படைத்து கிரிக்கெட் உலகில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் வெற்றி! சைபர் போருக்கு தயார் நம் படைகள்! ஜனாதிபதி முர்மு பெருமிதம்!
ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் வைபவ். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடும் அவர், டி20 போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து இளம் வயதில் சதமடித்த சாதனையையும் படைத்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி தொடரில் பீகார் அணிக்காக விளையாடி வரும் வைபவ், அருணாசல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 84 பந்துகளில் 190 ரன்கள் குவித்தார். இதில் 36 பந்துகளில் சதமடித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார். மேலும், 59 பந்துகளில் 150 ரன்கள் எடுத்து ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்தார்.
இந்த விருது விழாவில் கலந்து கொள்வதற்காக வைபவ், இன்று பீகார் அணியின் மணிபூர் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவும் வைபவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
வைபவின் இந்த சாதனைகள் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளன. அவரது எதிர்காலம் கிரிக்கெட் உலகில் பிரகாசமாக உள்ளது என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: அரசியல் அமைப்பு தினம்!! பார்லிமெண்டில் நடந்த கொண்டாட்டம்! முர்மு, மோடி பிரசண்ட்!