வங்கிகளுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்றும், அனைத்து சனிக்கிழமைகளும் பொதுத்துறை வங்கிகளுக்கு விடுமுறை என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் சுற்றறிக்கை போலியானது என மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் (PIB) தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் இதுபோன்ற எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் PIB தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் முக்கியமானதாக வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி வங்கி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாள் வேலைநிறுத்தத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகள் வார இறுதி நாட்களாக இருந்ததுடன், அதன்பிறகு மூன்று நாள் வேலைநிறுத்தம் நடைபெற இருந்ததால், தொடர்ந்து பல நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதை கருத்தில் கொண்டு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகள் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதையும் படிங்க: “விஜய் கதறும் காலம் விரைவில் வரும்...” - தவெகவுக்கு உச்சக்கட்ட ஆவேசத்துடன் சாபம் விட்ட ஆர்.பி.உதயக்குமார்...!
இதற்கிடையே, வங்கிகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்றும், ஒவ்வொரு சனிக்கிழமையும் பொது விடுமுறை என்றும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துவிட்டதாக ஒரு சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதில் SBI உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல் குறித்து PIB உண்மைச் சரிபார்ப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கிகளுக்கு விடுமுறையாக அறிவித்து மத்திய நிதி அமைச்சகம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பதே அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகும்.
மத்திய அரசின் செப்டம்பர் 21-ம் தேதி வெளியிட்ட தகவலிலும், 5 நாள் வங்கி வேலை வாரம் என்பது வங்கி தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், பொதுத்துறை வங்கிகளுக்கு 2015 முதல் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள் மட்டுமே பொது விடுமுறையாக உள்ளன; மற்ற சனிக்கிழமைகள் வங்கி சேவைக்கான வேலை நாட்களாக தொடர்கின்றன.
எனவே, “இனி அனைத்து சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை” அல்லது “இந்த வாரம் முதல் வங்கிகளுக்கு 5 நாள் வேலை” என்ற தகவலை தற்போதைய அதிகாரப்பூர்வ அறிவிப்பாக பொதுமக்கள் கருத வேண்டாம்.
5 நாள் வேலை வாரம் தொடர்பான கோரிக்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை மற்றும் நடவடிக்கை கட்டத்தில் உள்ளது. புதிய அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியாகும் வரை தற்போதைய வங்கி வேலைநாள் நடைமுறையே தொடரும்.
இதையும் படிங்க: மக்களே உஷார்! வீட்டுக்கே வரும் மளிகை பொருட்கள்?! சமூக வலைதளத்தில் புதிய ஆன்லைன் மோசடி!!