சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பிராந்தியத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் உள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவர்கள், இங்கு உள்ள அடர்ந்த வனப்பகுதியை சாதகமாக பயன்படுத்தி பதுங்கியுள்ளனர். அவர்களை ஒழித்து கட்டும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 217 நக்சல்கள் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கரில் வளர்ச்சிப் பணிகளை தடுத்து, மக்கள் நலனுக்கு முட்டுக்கட்டை போடும் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள பஸ்தர், பீஜப்பூர், நாராயண்பூர், தந்தேவாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனம் மற்றும் மலைப் பகுதிகளில் பதுங்கியிருக்கும் நக்சல்களை பிடிக்க, மத்திய - மாநில அரசுகளின் கூட்டு அதிரடிப்படை களம் இறங்கியுள்ளது. இந்த ஆண்டு துவக்கம் முதல் ஆயிரக்கணக்கானோர், ஆயுதங்களை கைவிட்டு நக்சல் சித்தாந்தத்தை கைக்கழுவி, தேசிய நீரோடையில் இணைந்துள்ளனர். அவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் சிறந்த முறையில் செயல்படுத்தப்படுகின்றன.
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் பிறந்தது விடியல்..! நக்சல் ஒழிப்பால் 17 கிராமங்களுக்கு கிடைத்த பரிசு..!

அரசின் அழைப்பை ஏற்காமல், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தும் நக்சல் அமைப்பினரை ஒழிக்கும் பணியும் தீவிர கதியில்செயல்படுத்தப்படுகிறது. ஆபரேஷன் பிளாக் பாராஸ் என்ற பெயரில் சமீபத்தில் நடந்த நக்சல் ஒழிப்பு வேட்டையில், அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், நாராயண்பூரில் பதுங்கியிருந்த நக்சல்கள், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். துணை ராணுவப்படை, அதிரடிப்படை போலீசார் நடத்திய தாக்குதலில் நக்சலைட்கள் 26 பேர் பலியாகினர்.

இவர்களில் பலர் அந்த அமைப்பை வழிநடத்திய தலைவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களின் தலைக்கு பல லட்சங்களின் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். இதில் முக்கியமானவராக கருதப்படுபவர் தான் சிபிஐ (மாவோயிஸ்ட்) உயர்மட்டத் தலைவரான நம்பலா கேசவ்ராவ், இவர் பசவராஜ் என்றும் அழைக்கப்படுகிறார். 70 வயதான பசவ ராஜு, இந்தியாவின் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவராக இருந்தார், அவரது தலைக்கு ₹ 1.5 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது .

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜியன்னாபேட்டா கிராமத்தைச் சேர்ந்த இவர், வாரங்கலில் உள்ள பிராந்திய பொறியியல் கல்லூரியில் (REC) பிடெக் பட்டம் பெற்றார். அவர் 1970களில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். 2004 ஆம் ஆண்டில் மக்கள் போர் குழு மற்றும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (MCC) இணைந்தார். 2018 ஆம் ஆண்டில் அவர் CPI (மாவோயிஸ்ட்) இன் பொதுச் செயலாளரானார். இந்தியாவில் நடந்த மிகக் கொடிய மாவோயிஸ்ட் தாக்குதல்களில் சிலவற்றிற்கு மூளையாகச் செயல்பட்டதற்காக பசவ ராஜு பரவலாக அஞ்சப்படுகிறார்.

2010 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் சிந்தல்னாரில் 76 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதிலும் , 2013 ஆம் ஆண்டு ஜிராம் காட்டியில் நடந்த பதுங்கியிருந்து நடத்தப்பட்ட தாக்குதலிலும் முக்கிய பங்கு வகித்தார். 1980 ஆம் ஆண்டு சிபிஐ-எம்எல் (மக்கள் போர்) உருவாவதற்கு பசவராஜு முக்கிய பங்கு வகித்தார், மேலும் 1992 ஆம் ஆண்டு அதன் மத்திய குழுவின் ஒரு முக்கிய தலைவரானார். சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்த மாவோயிஸ்ட் இயக்கத்திற்கு அவரது மரணம் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

நாராயண்பூரில் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. நக்சல் வேட்டை தொடர்வதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. போலீசாரின் நடவடிக்கையை தாக்குப்பிடிக்க முடியாத பலர் ஆயுதங்களை விட்டு சரண் அடைந்து வருகின்றனர்.
நக்சல்களை வேட்டையாடி வீரர்களுக்கு துணை முதல்வர் அருண் சாவ், சட்டசபை சபாநாயகர் ரமண் சிங் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். 40 முதல் 42 டிகிரி வெப்பநிலையில், அடர்ந்த வனப்பகுதியில் உயிரை துச்சமென நினைத்து நக்சல்களை வேட்டையாடிய நம் வீரர்களுக்கு பாராட்டுக்கள் என ரமண் சிங் கூறினார்.
இதையும் படிங்க: K9 ROLO..! நாலு கால் சாகச வீராங்கனைக்கு CRPF மரியாதை.. துணிச்சல்காரிக்கு கிடைத்த உயரிய கவுரவம்..!